காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதர், இன்று (ஆகஸ்ட் 1) நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நின்ற கோல தரிசனம் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ளார். மொத்தம் 48 நாட்கள் இந்த மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
விழா தொடங்கும்போது முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 31 நாட்களாக அத்திவரதர் சயன கோலத்திலேயே வைக்கப்பட்டார். சயன கோல தரிசனம் நேற்றுடன் நிறைவு பெற்றது. அப்போது அத்திவரதர் மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நின்ற கோலத்துக்கு மாற்றுவதற்காக, கிழக்கு கோபுர வாசல் வழியாக நண்பகல் 12 மணிவரை பொது தரிசனத்துக்கு கோயிலுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப் பட்டனர். அதன் பின்னர் கோயிலுக்குள் வந்துவிட்டவர்கள் மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப் பட்டனர். முக்கியப் பிரமுகர்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் ஆகியோர் அத்தி வரதரை மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
அதன் பின்னர் அத்திவரதை நின்ற கோலத்தில் வைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் கோயிலுக்குள் முக்கிய பட்டாச்சாரியார்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. கோயிலின் மேற்கு கோபுர வாயிலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். கடந்த ஒரு மாதமாக மக்கள் கூட்டமாக இருந்த காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலை மாலை 5 மணிக்கு மேல் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 1979-ம் ஆண்டு எந்த பீடத்தின் மீது அத்திவரதர் நிறுத்தப்பட்டாரோ அதே பீடத்தின் மீது இப்போதும் நிறுத்தும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று காலை (ஆகஸ்ட் 1) முதல் அத்திவரதரை பக்தர்கள் நின்ற கோலத்தில் தரிசித்தனர்.
நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதரைக் காண பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று காலை 5.25 மணி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளிக்க தொடங்கினார். சயன கோலத்தில் தினந்தோறும் 1 லட்சமாக இருந்த பக்தர்களின் எண்ணிக்கை, 2 லட்சமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அத்திவரதரின் நின்ற கோல தரிசனம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.