தமிழகம்

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை கபடி வீராங்கனை: சத்தமில்லாமல் சாதித்த  குருசுந்தரி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற மதுரையைச் சேர்ந்த பெண், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மலேசியாவில் கடந்த மாதம் உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீராங்கணை மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த குருசுந்தரி. இவர், கோவை வனக்கோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். 

குருசுந்தரி, பள்ளி, கல்லூரிகளில் கபடி போட்டியில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற்றவர். சத்தமில்லாமல் கபடி போட்டிகளில் சாதித்துக் கொண்டிருந்த அவரும், அவரது திறமையும் அடையாளப்படுத்தப்படாமல் இருந்தது. 

ஆனால், தொடர்ந்து முயற்சி செய்து இந்திய அணியில் இடம்பெற்று, கபடி போட்டியில் உலகக் கோப்பையை பெற்றுத் தந்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து குருசுந்தரி கூறுகையில், "அரசு உதவி செய்தால் என்னைப்போன்ற பல வீராங்கணைகள் கபடி மட்டுமில்லை, பல விளையாட்டுகளில் சர்வதேச அளவில் ஜொலிப்பார்கள். 

நான் பள்ளிப் பருவத்தில் இருந்தே தொடர்ந்து 15 ஆண்டாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். இந்த விளையாட்டில் கை, கால் அடிப்பட்டுவிடும். அதனால், பலர் பாதியிலே விளையாட்டு ஆசையை மூட்டை கட்டி வைத்துவிடுவார்கள். வீட்டில் பெண்களையும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாட விட மாட்டார்கள். நானும் பல சோதனைகளைக் கடந்தே இந்த சாதனையை செய்ய முடிந்தது. 

நான் பிஏ, எம்ஏ, எம்பில் படித்துள்ளேன். எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது கனவும், லட்சியமும் இருந்தது.  ஆனால், தற்போது இந்திய அணியில் இடம்பெற்றதோடு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த இந்திய அணியில் நானும் இடம்பெற்றுள்ளேன், அந்த வெற்றிக்கு நானும் ஒரு கருவியாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்வமும், இடைவிடாத பயிற்சியும், பெற்றோர் ஊக்கமுமே நான் இந்த வெற்றியைப் பெறுவதற்கு முக்கிய காரணம்" என்றார்.
 

SCROLL FOR NEXT