தமிழக மதுவை கேரள மாநிலத்தில் கொண்டுவந்து விற்பனை செய்யக் கூடாது என்று குறிப்பிட்டு, தமிழக-கேரள எல்லையில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்தனர் கேரள போலீஸார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்குள் நுழையும் வாகனங்களில் தீவிர சோதனையும் மேற்கொள்கின்றனர்.
தமிழக-கேரள எல்லையில், கேரள மாநிலத்துக்கு உட்பட்ட அட்டப்பாடி, சோலையூர், அகளி, கோட்டத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி, உடல்நலம் பாதித்து இளம் வயதிலேயே மரணமடைந்தனர். இதனால் இங்குள்ள மலைக் கிராமங்களில் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பல குழந்தைகள் போதிய ஊட்டசத்தின்றி இறந்துபோயின. கேரள அரசு நடத்திய ஆய்வில், பழங்குடியின மக்களின் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரிக்க மதுவே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மலைவாழ் மக்கள் வசிக்கும் அட்டப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுமையான மதுவிலக்கை அமலுக்கு கொண்டுவந்தது கேரள அரசு.
`உசிரு போராட்டம்’
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் முழு மதுவிலக்கு இருந்த நிலையில், தமிழக-கேரள எல்லையில், தமிழகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால், மது தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பலரும், அருகில் உள்ள தமிழக எல்லைக்கு வந்து, மது அருந்திச் செல்வது வாடிக்கையானது.
கேரள அரசு எந்தக் காரணத்துக்காக, தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தியதோ, அந்த நோக்கம் சிதைந்தது. மதுவால் இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் ஒன்றுதிரண்டு, இரு மாநில எல்லை நுழைவுவாயிலான, கேரளாவுக்கு உட்பட்ட அட்டப்பாடியில் சாலையோரம் தங்கி `உசிரு போராட்டம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினர்.
சாலையோரம் பல நாட்கள் இரவு-பகலாக தங்கி, மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பாட்டுப் பாடியபடி, ஆனைக்கட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவோயிஸ்ட் எச்சரிக்கை!
இதற்கிடையில், மாவோயிஸ்ட் தரப்பில், இருமாநில எல்லையோர மலைக் கிராமங்களில் ஒட்டப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், ‘ஆனைகட்டி மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும், இல்லையேல், குறிப்பிட்ட மதுக்கடை தகர்க்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு, ஆனைகட்டி டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிட்டது. இதனால், அந்தக் கடை மூடப்பட்டது. ஆனால், ஆனைகட்டியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜம்புகண்டியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால், மீண்டும் பழைய நிலையே உருவானது.கேரள எல்லையில் உள்ள மலைக் கிராமங்களில் இருந்து வாடகை ஜீப்புகள் மற்றும் ஆட்டோக்களில் ஜம்புகண்டி வரும் பழங்குடியின ஆண்கள், மது அருந்திய நிலையில், கேரள மாநிலத்துக்கு திரும்பிச் செல்வது வாடிக்கையானது.
வனத்தையொட்டி சாலையில், இரவு நேரத்தில் மது போதையில் செல்வதால், யானை தாக்கியும், விபத்தில் சிக்கியும் உயிரிழப்பது தொடர்ந்தது. மதுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பது ஒருபுறமிருக்க, யானையாலும், வாகன விபத்தாலும் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
மனைவியை பறிகொடுத்த டாக்டர்!
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வலியுறுத்தியும், ஜம்புகண்டி டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரியும் பழங்குடியினர் சங்கத்தினர், கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். எனினும், கடை மூடப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் இந்த மதுக்கடை பாரில் இருந்து போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மோதியதில், அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் என்பவரது மனைவி ஷோபனா உயிரிழந்தார். மனைவி ஷோபனாவின் உடலை சாலையில் இருந்து எடுக்காமல், டாக்டர் ரமேஷ் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜம்புகண்டி மதுக்கடையை மூட வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த மதுக்கடை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மதுக்கடையும், அதையொட்டியிருந்த பாரும் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி மலைக் கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனாலும், ஜம்புகண்டியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தடாகம் பகுதியில் இருந்து மது வாங்கிக்கொண்டு, கேரளாவில் மது தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்வதும், கள்ளத்தனமாக மலைக் கிராமங்களில் விற்கப்படுவதும் தொடர்ந்தது.
புதிய சோதனைச் சாவடி!
இதையடுத்து, மதுவைத் தடுக்க கேரள காவல் துறை களமிறங்கியது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குள் நுழையும் சாலையில், புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள காவல் துறை அறிவிப்புப் பலகையில், `தமிழ்நாட்டு மதுவை கேரளாவுக்குள் எடுத்து வருவது குற்றமாகும்’ என தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.மேலும், இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், பேருந்து என அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பின்பே, கேரளாவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பழங்குடியின மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கேரள அரசைப்போல, தமிழக அரசும் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் கேரள எல்லையோர தமிழகப் பகுதிகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்” என்றனர்.
மலைக் கிராமத்தில் வசிக்கும், பழங்குடியின ஊர் மூப்பன்கள் என்று அழைக்கப்படும் கிராமப் பெரியவர்கள் கூறும்போது, “மதுவுக்கு அடிமையானவர்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும், பணம் செலவு செய்து, அந்தக் கடைக்குச் செல்கின்றனர். இதைத் தடுக்க மலைக் கிராமங்களில், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த அரசு முன்வர வேண்டும்” என்றனர்.