கால்நடைத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரை பிறந்த தேதியை திருத்தி மீண்டும் பணியில் சேர்த்து பணப்பலன்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், பெரிய குளத்தைச் சேர்ந்த கே.சன்னாசி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கால்நடைத் துறை உதவியாளராக 26.5.1990-ல் நான் பணியில் சேர்ந்தேன். அப்போது எனது பணிப் பதிவேட்டில் பிறந்த தேதி 13.4.1956 என பதிவாகியிருந்தது. அந்த பிறந்த தேதி தவறானது. எனது உண்மையான பிறந்த தேதி 10.7.1959 ஆகும். பெரியகுளம் நகராட்சி பதிவேட்டில் 1959-ல் பிறந்ததாக பதிவாகியுள்ளது. இதனால் பணிப்பதிவேட்டில் எனது பிறந்த தேதியை 10.7.1959 என மாற்றம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு மனு கொடுத் தேன். எனது கோரிக்கை ஏற்கப் பட்டு பிறந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திடீரென எனது பிறந்த தேதி மாற்றத்தை ரத்து செய்து, எனது ஓய்வு தேதி 13.4.2014 என கால்நடைத் துறை உதவி இயக்குநர் அறிவித்தார். தமிழ்நாடு சார்நிலை பணியாளர் விதிப்படி, பிறந்த தேதியில் மாற்றம் இருந்தால் பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி அந்த 5 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்துள்ளேன். எனவே, எனது பிறந்த தேதி மாற்றத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என்னைத் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் 5 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை. 5 ஆண்டுக்குள் விண்ணப்பித்ததாக போலி ஆவணம் தயாரித்துள்ளார் என கால்நடைத் துறை இணை இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெரியகுளம் நகராட்சி பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மனுதாரரின் பிறந்த தேதி சரியாக உள்ளது. பணியில் சேரும்போது, பிறந்த தேதியை மாற்றம் செய்யமாட்டேன் என மனுதாரர் உறுதி அளித்திருப்பதால் மனுதாரரின் பிறந்த தேதியில் மாற்றம் செய்ய முடியாது என அதிகாரிகள் தரப்பில் கூறியதை ஏற்க முடியாது. ஆவணங்களைப் பார்க்கும்போது, மனுதாரரின் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மனுதாரர் போலி ஆவணம் அளித்தார் என்பதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரரின் பிறந்த தேதியில் மாற்றம் செய்து அவருக்கு பணித் தொடர்ச்சி வழங்கி அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் சன்னாசி, பணியில் சேரும்போது அளித்த பிறந்த தேதி அடிப்படையில் 2014-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.