தமிழகம்

திமுக வெற்றியைத் தள்ளிவைக்கலாம்; தடுக்க முடியாது- உதயநிதி

செய்திப்பிரிவு

திமுகவின் வெற்றியைத் தள்ளி வைக்கலாம். ஆனால், யாராலும் தடுக்க முடியாது என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக 3 நாள் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். மேலும், வளத்தூர் மற்றும் மசிகம் ஆகிய கிராமங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் வேலூர், பென்னாத்தூர், சேக்கனூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி. அப்போது அவர் பேசும்போது, ''தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக அரசு அடிமையாக உள்ளது. தேர்தல் முடிவு மூலம் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதியே  வேலூர் மக்களவைத் தேர்தலையும் நடத்தி இருந்தால் கதிர் ஆனந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் சென்றிருப்பார். ஆனால் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதி என்பது தெரிந்து, அதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஆளும் அதிமுக அரசு நினைத்தது. திமுக மீது அவப்பெயரை ஏற்படுத்தவும், ஆளுங்கட்சி தேர்தலைத் தள்ளி வைத்தது. திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தள்ளி வைக்கத்தான் முடியும்'' என்றார் உதயநிதி. 

நேற்று மாலை தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த உதயநிதி, கடந்த முறையை விட இம்முறை மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT