கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல் பொருள் துறையினரின் அகழ்வாராய்ச் சியில் கிடைத்துள்ளன. மேலும் ‘ஆதன், இயனன், டிசன்’ போன்ற வார்த்தைகளுடன் மண்பாண்ட ஓடுகள் மூலம் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கிடைத் துள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிபள்ளிச்சந்தைபுதூரில், மத்திய தொல்பொருள் துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை நகரம் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன.
பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்வு பிரிவு சார்பில் கடந்த மார்ச் முதல் கீழடிபள்ளிச்சந்தைபுதூரில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இதில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொன்மை நகரத்தினர் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் கூறியதாவது: திருவிளை யாடல் புராணத்தில் பாண்டிய மன்னன் பெருமணலூரை (தற்போது மணலூர்) தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்ததாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் மணலூர் கண்மாய் கரையில் நடைபெறும் அகழ்வாய்வில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு பழமை யான கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் “ஆதன், இயனன், டிசன்” போன்ற வார்த்தைகள் கொண்ட மண் பாண்ட ஓடுகள் முதல்கட்ட ஆய்வில் கிடைத்துள்ளன. இன்னும் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போது பாத்திரங்களில் பெயர் வடிப்பதுபோல, அக்காலத்திலும் மண் பாண்டங்களில் எழுத்துகளை பொறிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் மூலம் அக்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மேலும் சதுர வடிவிலான புதிய கட்டிட அமைப்புகள் கிடைத்துள்ளன. இந்த கட்டிடங்களில் உள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆச்சரிய மளிக்கிறது. 38 செமீ நீளம் 28 செமீ அகலம் 7 செ.மீ. உயரத்தில் செங்கற்கள் உள்ளன. மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்றார்.
பேச்சு வடிவில் இருந்த தமிழை எழுத்து வடிவில் எழுதப் பயன்பட்ட தொன் மையான எழுத்து வடிவம் தமிழ் பிராமி. இதுதொடர்பான 93 கல்வெட்டுகள் தமிழ கத்தில் 30 இடங்களில் கிடைத்துள்ளன.
இதில் பெரும்பாலும் பாண்டிய நாட்டில் மட்டுமே 20 இடங்களில் 64 கல்வெட்டு கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட மாங்குளம், எடக்கல், கீழவளவு, யானைமலை, வரிச்சியூர், திருப்பரங் குன்றம், அழகர்மலை, குன்றக்குடி, முத்துப்பட்டி, விக்கிரமங்கலம், திருவாத வூர், அரிட்டாபட்டி உள்ளிட்ட 20 இடங் களில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
கீழடிபள்ளிச்சந்தைபுதூரில் மேற் கொள்ளப்படும் அகழ்வாய்விலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள் கல்வெட்டுகளில் குறிப் பிடப்படும் தகவல்கள் அகழ்வாராய்ச்சி மூலம் மெய்ப்பிக்கப்பட உள்ளன.