கள் என்பது போதைப்பொருள் அல்ல. சங்ககாலம் முதலே நமது உணவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. வெளிநாட்டு மது வகைகளை அரசே விற்கும்போது, பாரம்பரிய கள் விற்க தடை செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? கள் இறக்க அனுமதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்கிறார் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.எஸ்.பாபு.
கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுப்பவரும், போராட்டங்கள் நடத்துபவருமான ஏ.எஸ்.பாபுவை, சூலூர் வட்டம் ஏ.ஜி.புதூர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
“பூர்வீகம் இருகூர் அருகேயுள்ள அத்தப்ப கவுண்டர் புதூர். பாரம்பரிய விவசாயக் குடும்பம். பெற்றோர் செங்கோடகவுண்டர்-ராஜம்மாள். கிராமத்தில் இருந்த அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர், இருகூர் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்தேன். சிறு வயதிலேயே தோட்ட வேலை பார்ப்பேன். காலையில் பள்ளி செல்வதற்கு முன் மாடு மேய்ப்பது, சாணி அள்ளுவது, மாலையில் பள்ளிவிட்டு வந்தவுடன் மாட்டுக்கு புல் வெட்டுவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவேன்.
எங்கள் மாட்டுக்குப்போக மீதமிருக்கும் புல்லை வண்டியில ஏற்றி, சிங்காநல்லூர்போய் விற்றுவிடுவேன். ஆரம்பத்தில் நாங்கள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டோம். சரியான விலை கிடைக்கவில்லை. மேலும், கூட்டுறவு சொசைட்டி மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி, தண்ணீரில் கலந்து, பயிர்களுக்கு ஸ்பிரே செய்வோம். இதைக் கையாண்டவர்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்தக் காரணங்களால பருத்தி விவசாயத்தை பெரும் பாலான விவசாயிகள் கைவிட்டார்கள். நாங்களும் பருத்தி விவசாயத்தை விட்டுட்டு, காய்கறி பயிரிட்டோம். ஆட்கள் பற்றாக்குறையால் காய்கறி சாகுபடியிலேயும் பிரச்சினை வந்தது. இந்தக் காரணங்களால் தென்னை விவசாயத்துக்கு மாறினோம். 1985-ம் ஆண்டில் இருந்து விவசாய சங்கங்கள் நடத்தும் கூட்டத்துக்குப் போவேன். அப்போதிலிருந்து அமைப்புகளின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தில் இணைந்து, 2009-ல் மாவட்ட இளைஞரணி செயலராகப் பொறுப்பேற்றேன். பின்னர் மாவட்டத் தலைவரானேன். இந்த நிலையில், அந்த சங்கத்தில் இருந்து விலகி, கடந்த மே மாதம் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
கள்ளுக்காக கைதான பாபு!
2009-ல் கள்ளுக்கு அனுமதி கோரி சூலூரில் போராட்டம் நடத்தியபோது, முதல்முறையாக கைதாகினேன். 2011-ல் கள் இறக்கியதாக கைது செய்தனர். கோவை சிறையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகு விடுதலையானேன்.
கள் இறக்க அனுமதி கோரி ரயில் மறியல், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். அதேபோல, பல்லடத்தில் கடனுக்காக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதால் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், கள் இறக்க அனுமதிக்கப்படுகிறது.
கள் என்பது போதைப்பொருள் அல்ல. சங்க காலம் முதலே உணவின் ஒரு பகுதியாக உள்ளது. நீரா பானம் இறக்க அனுமதிக்கும் அரசு, கள் இறக்க அனுமதிப்பதில்லை. வெளி நாட்டு மதுபான வகைகளே அரசே விற்கும் நிலையில், பாரம்பரியம் மிக்க கள்ளுக்கு தடை செய்துள்ளது எவ்வளவு பெரிய அவலம்? கள் இறக்க அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
தங்கமும்... பருத்தியும்...
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு, விவசாயிகளால் விலை நிர்ணயிக்க முடிவதில்லை. உரிய விலை கிடைக்காமல், விளை பொருட்களை சாலையில் கொட்டும் நிலைக்குக்கூட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 1975-களில் ஒரு பவுன் தங்கம் விலையும், ஒரு குவிண்டால் மஞ்சள் விலையும் ஒன்றாக இருந்தது. இப்போது தங்கம் ரூ.26 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
ஆனால், பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரைதான் கிடைக்கிறது. அதிக உற்பத்தியும் விலை வீழ்ச்சிக்கு காரணமாகிறது. எனவே, விளைச்சலை முறைப்படுத்தி, விலையை நிர்ணயிக்கும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விளை பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை விற்பனை செய்ய, தனி மையங்களை அமைக்க வேண்டும்.
இதேபோல, ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையால் பலர் விவசாயத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுபவர்களை, விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். அரசு வழங்கும் கூலியுடன், விவசாயிகளும் குறிப்பிட்ட கூலி கொடுப்பார்கள். இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத்தரப்பினரும் பயனடைவர். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, ஓய்வூதியம் கொடுக்கலாம்.
பொதுவாகவே, மக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக, வயதானவர்களுக்கு மட்டும் சலுகைகள், உதவிகள் வழங்கலாம். பாசன நீர் இல்லாததாலும் விவசாயத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
நிலம், நீர், காற்று மாசு!
வளர்ச்சி, தொழில் புரட்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்றை மாசுபடுத்திவிட்டோம். இதேநிலை தொடர்ந்தால், இந்த பூமி மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும். இது நம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். எனவே, மண்ணை, தண்ணீரை, காற்றை மாசுபடுத்தும் திட்டங்களை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. பெண் கொடுக்கக் கூட தயங்குகிறார்கள்.
காவல் துறையும், ராணுவமும் மக்களையும், நாட்டையும் பாதுகாக்கிறது. ஆனால், பாதுகாவலர்கள் உள்ளிட்ட எல்லோருக்குமே உணவுகொடுத்து பாதுகாப்பது விவசாயிகள்தான். இதை அனைவரும் உணர வேண்டும். அதுவரை விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். மனைவி பெரியநாயகி, மகன் விமல் உள்ளிட்ட குடும்பத்தினர், எனது பொதுவாழ்க்கைக்கு பெரிதும் ஒத்துழைக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாவிட்டால், எதிர்காலத்தில் விவசாயம் செய்யவே ஆள் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கும் விவசாயத்துக்கு உயிர்கொடுக்க இனியாவது மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” என்றார் வேதனையுடன் ஏ.எஸ்.பாபு.
நாட்டின் முதுகெலும்பு என்று விவசாயிகளை சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. தேய்ந்து கொண்டிருக்கும் அந்த முதுகெலும்பு முற்றிலுமாக சிதைந்து விடுவதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் கருணைகாட்ட வேண்டுமென்பதே ஒவ்வொரு விவசாயியின் எதிர்பார்ப்பு!
- ஆர்.கிருஷ்ணகுமார்