தேனி அருகே பள்ளபட்டி மூல வைகை ஆற்றில் நீர் திருட்டுக்காக சிலர் அமைத்துள்ள ராட்சத உறை கிணறு. 
தமிழகம்

மூலவைகையில் தடுப்பணை கட்டும் இடத்தில் தண்ணீரைத் திருட ராட்சத உறைகிணறு

செய்திப்பிரிவு

மூல வைகையில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்துக்கு அருகே தண்ணீர் திருட்டுக் காக ராட்சத உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

தேனி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி, அம்மச்சியாபுரம், கொடுவி லார்பட்டி, அய்யனார்புரம், கோட்டைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் முக்கிய நீராதாரமாக மூல வைகை ஆறு உள்ளது.

இதன் மூலம் 2, 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழைக் காலத்தில் விரயமாகும் நீரைத் தேக்கிவைக்க பள்ளபட்டி பகுதியில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மதுரையில் இருந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த ஆற்றின் நிலவியல் அமைப்புகளை ஆய்வு செய்தனர். பின்னர், இங்குள்ள சுடுகாட்டின் கிழக்குப் பகுதியில் தடுப்பணையைக் கட்ட முடிவு செய்தனர். இதற்காக, கடந்த 16-ம் தேதி பொதுப்பணித் துறை குழு கள ஆய்வு மேற்கொண்டது. இதில் மெக்கர் கருவி மூலம் பூமிக்குள் உள்ள பாறைகள், கனிம வளம் குறித்து அளவீடு செய்யப்பட்டது. இப்பகுதியில் நீரைத் தேக்கினால் சுற்றுப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கான திட்ட அறிக்கை, வரை படம் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பணை அமைய உள்ள பகுதியில் தனியார் சிலர் ராட்சத உறை கிணறு ஒன்றை அமைத்து வருகின்றனர். இது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஆற்று நீரை ஆழ்குழாய், டீசல் மோட்டார் மூலம் திருடி வந்தனர். இந்நிலையில், தண்ணீரை திருட பிரம்மாண்டமான உறை கிணறை ஏற்படுத்தி இருப்பது மாவட்ட நிர் வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இது குறித்து மூல வைகை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி கூறியதாவது: உறை கிணறுகளை அரசும், உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே உருவாக்க வேண்டும். ஆனால், தனியார் சிலர் உறை கிணற்றை அமைத்திருப்பது நீர் உரிமைக்கு விடப்பட்ட சவால்.

தடுப்பணையைக் கட்டினால் இப்பகுதி விவசாயிகள் அனைவரும் பலன் பெறுவர். இது குறித்து குறைதீர் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

சின்னச்சாமி

ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் கூறுகையில், மூலவைகை ஆற்றில் தனியார் பெரிய உறை கிணற்றை அமைக்கும் அளவுக்கு பொதுப்பணித் துறையினர் கண்காணிப்பில் அலட்சி யமாக இருந்துள்ளனர். உறை கிணறை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- என். கணேஷ்ராஜ்

SCROLL FOR NEXT