கவுரவ கொலைகளை தடுக்க, கோவை மாவட்ட காவல்துறையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், புகார்களை தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கவுரவ கொலை சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மாதம் மேட்டுப்பாளையம் அருகே தம்பி மற்றும் அவரது காதலியை கவுரவ கொலை செய்த அண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் கவுரவ கொலை கள் நடக்கும் மாவட்டங்களை கணக் கெடுத்து, அவற்றை தடுப்பதற்குரிய வழிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தி, கவுரவ கொலைகள் பற்றி விசாரிக்க சிறப்புக் குழு ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டம் வாரியாக காவல்துறை நிர்வாகம் சார்பில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகம் சார்பில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘கவுரவ கொலை, அது தொடர்பான கொலை மிரட்டல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட காவல்துறை நிர்வாகம் சார்பில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள் ளது. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார் தலைமையிலான இக்குழுவில், மாவட்ட சமூக நல அலுவலர், ஆதிதிராவிடர் நல அலுவலர், காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸார் உள்ளனர்.
இந்த சிறப்புக் குழு 24 மணி நேரமும் செயல்படும். கவுரவ கொலை, அது தொடர்பான மிரட்டல், கலப்பு திருமணம் செய்தவர்களை மிரட்டுவது, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட புகார்களை 0422-2200777, 94981-01165, 94981-81212 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த பிரத்யேக எண் குறித்து, மாவட்டத்திலுள்ள உட்கோட்டங் கள் வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய இடங்களில், விளம்பர பலகையாகவும் இந்த எண் வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.