தமிழகம்

மக்களவைத் தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி திமுக: ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

இந்தியாவிலேயே திமுக வேட்பாளர்கள்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும், 100 சதவீத வெற்றியும் பெற்றுள்ளனர் என ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நேற்று  ‘நன்னன் குடி’ நடத்திய நூல் வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது: 

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வரலாற்றில் பெற முடியாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றோம். புதுவை உள்ளிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் திமுகவின் அணி வெற்றி பெற்று இன்றைக்கு நாடாளுமன்றத்தில், 38 எம்.பி.க்களும் முழங்கிக் கொண்டிருக்கக்கூடிய காட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 

அது மட்டுமல்ல இன்னும் ஒரு பெருமை இருக்கின்றது, என்னவென்றால், உதயசூரியன் சின்னத்தின் சார்பில் நின்ற திமுக வேட்பாளர்கள் அத்துனை பேரும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இது ஒரு மிகப்பெரிய பெருமை. அதிலும் குறிப்பாக வெற்றி பெற்றிருப்பவர்கள் வாங்கிய வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தீர்கள் என்றால், 1 லட்சம் முதல் 5 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இதுவரை யாரும் பெற்றிடாத ஒரு மிகப்பெரிய வரலாற்றை திமுக பெற்றிருக்கின்றது.

நான்கு நாட்களுக்கு முன்பு மற்றும் ஒரு கணக்கு வந்திருக்கின்றது. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றிருக்கக்கூடிய வாக்கின் விகிதாச்சாரத்தை வெளியிட்டிருந்தார்கள். அப்படிப் பார்க்கின்ற பொழுது இந்தியாவிலேயே அதிக சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கக்கூடிய கட்சியும்  திமுகதான். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் 3-வது இடத்தில் அமர்ந்திருக்கின்றோம். 

மத்தியிலும் ஆட்சியில் இல்லை, தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இல்லை, 38 எம்.பி.க்கள் வென்று என்ன செய்யப் போகின்றார்கள் என்று ஒரு சிலர் பேசக்கூடிய நிலையை ஊடகங்களில் விவாத மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பேசக்கூடிய காட்சிகளையெல்லாம் பார்க்கின்றோம். 38 பேரும் சென்று என்ன முழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்? 

நாடாளுமன்றத்திற்குச் சென்றதும் பெரியார் வாழ்க - தமிழ் வாழ்க - கலைஞர் வாழ்க - அண்ணா வாழ்க என்ற முழக்கத்தை முழங்கியிருக்கின்றார்கள். இதைவிட வேறென்ன பெருமை நமக்கு வேண்டும். இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து வரப்போகின்றது என்ற உணர்வோடு மும்மொழிக் கொள்கை என்ற திட்டத்தைக் கொண்டு வந்த பொழுது, மீண்டும் 1965-ஐ உருவாக்காதீர்கள் என்ற எச்சரிக்கையை திமுக சார்பில் நாம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். 

அதன் பிறகு அதனை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். தென்னக ரயில்வேயில் அனுப்பக்கூடிய சர்குலர்கள், கடிதங்கள் அத்துனையும் தமிழில் இருக்கக்கூடாது ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் இருக்க வேண்டும் என்ற உத்தரவு வந்த போது, அடுத்த அரை மணி நேரத்தில் திரும்பப் பெற வைத்த இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம். 

அதன்பிறகு, அஞ்சல் துறையில் தேர்வு எழுதுகின்ற நேரத்தில் கூட தமிழ் மொழியில் கேள்வித்தாள் இடம்பெறாது, தமிழில் எழுதக்கூடாது என்றும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் எழுத வேண்டும் என்றார்கள். அதற்காக குரல் கொடுத்து அதையும் திரும்பப் பெற வைத்தோம்.

உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படக்கூடிய தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கலாம் என்று சொல்லி ஒரு ஐந்தாறு மொழிகளை மாத்திரம் அவர்கள் தேர்வு செய்து அதனை வெளியிட்டார்கள். அதில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பதால் குரல் கொடுத்தோம். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை டி.ஆர்.பாலு  நேரடியாகச் சந்தித்து நம்முடைய உணர்வை வெளிப்படுத்திய அடுத்த நாளே தமிழிலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வரும் என்ற அறிவிப்பை வெளிவர வைத்தோம்.

இப்பொழுது புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றினை அறிமுகப்படுத்த முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காக திமுக சார்பில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவில் சில கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் அனுபவம் பெற்றிருக்கக்கூடியவர்களை எல்லாம் ஒரு குழுவாக அமைத்து அந்த குழு பரிந்துரை செய்த அறிக்கையைத் தயார் செய்து நேற்றைய தினம் கனிமொழி தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துனை பேரும் அந்தத் துறையின் அமைச்சரிடத்தில் நேரடியாகச் சென்று சந்தித்து கொடுத்திருக்கின்றோம்.

உங்களுடைய உணர்வுகளை மதிக்கின்றோம், எனவே இதனை நிச்சயமாக பரிசீலிக்கின்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் அந்தப் பணிகளை நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT