மனிதர்கள் நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பது போல், ஒரே பகுதி நாய்களுடன் இனப்பெருக்கம் செய்வதால் நாட்டு நாய்களுக்கு கோணக் கால் குறைபாடுகளுடன் கூடிய குட்டிகள் பிறப்பது அதிகரித்துள்ளது.
செல்லப்பிராணிகள் வளர்ப்போர், முன்பு வெளிநாட்டு ரக நாய்களை வாங்கி வளர்ப்பதை கவுரவமாகவும், பாரம்பரிய நாட்டு நாய் வளர்ப்பதை கவுரவக் குறைச்சலாகவும் கருதினர். தற்போது செல்லப்பிராணிகள் வளர்ப்போரிடம் நாட்டு ரக நாய் இனங்களை வாங்கி வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால், கோம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட நாட்டு ரக நாய் இனங்களுக்கு ‘திடீர்’ மவுசும், வரவேற்பும் கூடியுள்ளது.
வெளிநாட்டு நாய் இனங்களை ஒப்பிடுகையில் நாட்டு நாய் இனங்கள் நமது நாட்டு சீதோஷனநிலையில் வாழ்ந்து பழகியதால் அவற்றின் உணவு பழக்க வழக்கங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால் தொற்று நோய் பரவாது. செல்லப்பிராணியாகவும், வீட்டு காவலுக்கும் நாட்டு நாய்களை இரட்டை பயன்பாட்டிற்கு வளர்க்கலாம்.
அதனால், கடந்த காலத்தில் கிராமங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த நாட்டு நாய் இனங்கள், தற்போது நகரங்களில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கன்னி, ராஜபாளையம், சிப்பிப்பாறை நாட்டு நாய் இனங்களில் சமீப காலமாக கோணக் கால் சிதைவு நோய் அதிகளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. குட்டிகள், கோணக் கால் குறைபாடுடன் பிறப்பது அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் மெரில்ராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பொதுவாக இளவயதுடைய குட்டி நாய்களில் எலும்பு தொடர் வளர்ச்சி நிலையில் இருக்கும். 4 முதல் 8 மாதங்களில் கால் எலும்புகளில் காணப்படும் வளர்ச்சி தட்டு செல்கள் பெருகினால்தான் முன் மற்றும் பின் கால் எலும்புகள் நீள வாக்கில் ஒழுங்காக வளர முடியும். குட்டி நாய்களுக்கு 10 மாதங்கள் நிறைவடைந்ததும் மென்மை தன்மையுடனும் வளர்ச்சி நிலையிலும் இருந்த கால் எலும்புகளில் வளர்ச்சி தட்டு செல்கள் தானாகவே மூடிவிடும். அப்போது எலும்புகள் முழு வளர்ச்சியடைந்து நல்ல உறுதி தன்மையுடன் காணப்படும்.
சுமார் 1 வயதை அடையும்போது கால் எலும்புகள் நன்கு வலுப்பெற்று விடுவதால் கோணக் கால் சிதைவு ஏற்படுவதில்லை. அதன்பின் நல்ல கால்களுடன் நாய்கள் காணப்படும். ஆனால், தற்போது அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கும், தனியார் கிளினிக்குகளுக்கும் சிகிச்சைக்கு வரும் நாட்டு ரக நாய்கள் பெரும்பாலும் கோணக் கால் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இது புதுவிதமாக இருக்கிறது. இதுபோல் முன்பு கோணக் கால் நாட்டு ரக நாய்களுக்கு ஏற்பட்டது கிடையாது.
மரபுக்குறைபாடு காரணமாக கோணக் கால் சிதைவு குறைபாடு வரலாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதுபோல் நாய்களும் ஒரே பகுதியில் உள்ள நாய்களை கொண்டு இனப்பெருக்கும் செய்வதால் இந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதுபோல், குட்டிகள் சிறுவயதில் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவதால் அதை சரி கவனிக்காமல் விட்டு கால் கோணலாக காணப்படலாம். வாகனங்களில் அடிப்படுதல், உணவில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுவதாலும் கோணக் கால் வரலாம்.
மொசைக், மார்பிள்ஸ், கிரானைட் தரைகளில் வளர்த்தல் போன்ற வளர்ப்பு முறை குறைபாடுகளாலும் இந்த குறைபாடு வரலாம். கோணக் கால் சிதைவு நோய் எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய எக்ஸ்ரே, ரத்தபரிசோதனை(கால்சியம் பாஸ்பரஸ் விகிதாச்சாரம்) எடுத்துப்பார்த்தல் மிக அவசியம்.
எதிர்பாராத விதமாக அடிபடும்போது முன் காலில் குறிப்பாக மணிக்கட்டு பகுதியில் உள்ள அல்னா என்ற எலும்புதான் நாய்களுக்கு மிகவும் பாதிப்புக்குளாகும். அடிப்பட்ட நாளில் இருந்து அந்த எலும்பில் உள்ள வளர்ச்சி தட்டு அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்குள் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே மூடிவிடும். அதனால், கால் கோணலாக வளரும், ’’ என்றார்.