திருப்பூரில் வாழும் பெரும்பாலான பின்னலாடைத் தொழிலாளர் குடும்பங்கள், வாரக் கூலியைக் கொண்டே வாழ்கின்றன. வறுமையில் வாடினாலும், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆம்... சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்த்து பூரித்துப்போனோம்” என்கின்றனர் திருப்பூர் மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க்- III ஏவுகணை.
இதை நேரில் பார்த்த உற்சாகத்துடன் பேசத் தொடங்கினர் மாணவர்கள் மணிகண்டன், முகமது தாஹீர், ஹரிகிருஷ்ணன் மற்றும் சந்தோஷ்.
“நாங்கள் சொந்த ஊரைத் தாண்டி வேறெங்கும் சென்றதில்லை. ஆனால், சந்திரயான்-2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டதை ஸ்ரீஹரிகோட்டாவில் சிறப்பு பார்வையாளர் பகுதியில் இருந்து நேரில் கண்டுகளித்தோம். முன்னதாக, சென்னையில் இருந்து சூலூர்பேட்டை சென்றோம். அங்கிருந்து ஆந்திர அரசு சிறப்பு பேருந்து வசதியை ஏற்பாடு செய்திருந்தது.
சூலூர்பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு 18 கிலோமீட்டர் தொலைவு பயணம் சென்றது, வாழ்வில் மறக்க முடியாத தருணம். நாங்கள் சென்ற சாலையின் இருபுறமும் கடல். நாங்கள் முதல்முறையாக அங்குதான் கடல் பார்த்தோம்.
ஹரிகோட்டாவில் ஏவுகணை தோட்டம் (ராக்கெட் கார்டன்), பார்வையாளர் மாடம், விண்வெளி அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்வையிட்டோம். ஏவுகணை தோட்டத்தில், எஸ்எல்வி தொடங்கி இன்றைய ஜிஎஸ்எல்வி வரை அனைத்துவிதமான ஏவுகணை மாதிரிகள் மற்றும் அவை குறித்த விளக்கத்தை வைத்திருந்தனர்.
விண்வெளித்துறையின் சாதனைகளை அருகில் இருந்து பார்ப்பதுபோல இருந்தது. தொடர்ந்து, விண்வெளி அருங்காட்சியகத்தில், இந்திய விண்வெளித் துறையின் படிப்படியான வளர்ச்சியை தெரிந்துகொண்டோம். அங்கும், எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, மங்கள்யான் உள்ளிட்ட மாதிரிகளைப் பார்த்தோம்.
சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவும்போது, அனைவர் மனதிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கவுன்ட் டவுண் தொடங்கியவுடன் பரவசம் ஏற்பட்டது” என்றனர்.
வெறுமனே பார்வையாளராக இல்லாமல், அணுஅணுவாக ரசித்து வந்துள்ளனர் இந்த மாணவர்கள். இவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் சரவணன் கூறும்போது, “சந்திரயான்-2 விண்ணில் ஏவுவதைப் பார்க்க தமிழர்களைவிட, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வடமாநில பள்ளிக் குழந்தைகளும் அதிகம் வந்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம், விண்வெளித் துறை குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்றார்.
- இரா.கார்த்திகேயன்