தமிழகம்

சத்தியமான எழுத்துகளே சரித்திரத்தில் நிற்கும்!

செய்திப்பிரிவு

எழுத்தாளர்கள் உண்மையை எழுத வேண்டும். குறிப்பாக, வரலாறு குறித்து எழுதுபவர்கள், அதற்கான அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு, உண்மையை மட்டுமே எழுத வேண்டும். சத்தியமான எழுத்துகளே சரித்திரத்தில் நிலைத்து நிற்கும்” என்கிறார் எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன்(51).

கோயம்புத்தூர் வரலாறு என்ற உடனேயே பெரும்பாலானவர்களுக்கு சி.ஆர்.இளங்கோவன் நினைவுதான் வரும். அந்த அளவுக்கு கோவையைப் பற்றியும், கோவையின் தொழில் துறை, நொய்யல் நதி உள்ளிட்டவை குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளார் இவர்.  ஒவ்வொரு புத்தகத்துக்காகவும் நிறைய கள ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் தேடியலைந்து ஆதாரங்களைத் திரட்டி புத்தகங்களை எழுதியுள்ளார். கோவை குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளதுடன், சுற்றுச்சூழல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். 

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருக்கும் சி.ஆர்.இளங்கோவனை, கொடிசியா அலுவலகத்தில் சந்தித்தோம்.

“கோயம்புத்தூர்தான் எனக்குப் பூர்வீகம். பெற்றோர் ராமசாமி-ஜோதிமணி. அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர். தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே கோகுலம், அம்புலிமாமா புத்தகங்களை படிப்பேன். தொடர்ந்து, காமிக்ஸ், படக்கதைகளில் ஆர்வம் செலுத்தினேன். 6-ம் வகுப்பு விடுப்பில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அக்கா பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்கக் கொடுத்தார். 

இரண்டு, மூன்று நாளில் அதைப் படித்து முடித்துவிட்டு, புத்தகத்தை திரும்பக் கொடுத்தேன். அவர்களால் நம்பவே முடியவில்லை. கதையில் உள்ள கதாபாத்திரங்கள் பெயரைக் கூறு என்று கேட்டபோது,  பல கதாபாத்திரங்கள் பெயரைக் கூறினேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்து, பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அனைத்துப் பாகங்களையும் கொடுத்து, படிக்குமாறு உற்சாகப்படுத்தினார்கள்.

தொடர்ந்து, கதை படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. குமுதத்தில் சாண்டில்யன் எழுதிய கடல்புறா, ஜலதீபம் எல்லாம் படித்தேன். சில நேரங்களில் புத்தகம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டபோது, ஒரு நண்பர்  நூலகம் சென்று படிக்குமாறு அறிவுறுத்தினார். விடுமுறை நாட்களில் தொடர்ந்து நூலகங்களுக்குச் சென்று, நிறைய புத்தகங்களைப் படித்தேன்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு சுஜாதா கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அவரது எழுத்துகள் பல  எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து அந்த எழுத்தாளர்களின் நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து பாலகுமாரன் போன்றோரின் எழுத்துகளை படிக்கத் தொடங்கினேன். ஆனால், குடும்ப நாவல்களில் எனக்கு பெரிய ஈடுபாடு வரவில்லை. வரலாற்று நூல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில், திமுக, கம்யூனிஸ்ட் அரசியல்  பொதுக்கூட்டங்களுக்குச் சென்று, கட்சியினரின் பேச்சை கவனிப்பேன். அவர்கள் பல தலைவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டும்போது, அந்தந்த தலைவர்கள் குறித்தும், அவர்கள் எழுதிய புத்தகங்கள் குறித்தும் படிக்கத் தொடங்கினேன். எனது நண்பர்களும் எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், புத்தகங்களையே கொடுத்தார்கள். அப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், குறைந்த விலையில், அதிக பக்கங்கள் கொண்ட, தரமான புத்தகங்களை வெளியிட்டது. அதையெல்லாம் வாங்கிப் படித்தேன். இடதுசாரி நண்பர்களும் ஆன்டன் செகாவ், லியோ டால்ஸ்டாய் உள்ளிட்ட ஆளுமைகளின் புத்தகங்களைக் கொடுத்தார்கள். இப்படி கம்யூனிஸம் சார்ந்த புத்தகங்களை படித்த அதே நேரத்தில், திராவிடக் கட்சித் தலைவர்களின் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினேன்.

சுற்றுச்சூழல் மீதான ஆர்வம்...

இதற்கிடையில் எம்.ஏ. பொதுநிர்வாகம் மற்றும் எம்.ஏ. சுற்றுச்சூழல் பொருளாதாரம் படித்தேன். மேலும், சொந்தமாய் ஒரு தொழிலும் தொடங்கினேன். இந்த சமயத்தில், இயற்கை, சுற்றுச்சூழல் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போது பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த நெடுஞ்செழியனின் நட்பு கிடைத்தது. பெரிய படிப்பாளியான அவர், சர்வதேச சுற்றுச்சூழல் தொடர்பான நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தார்.  அதேபோல, டாக்டர் செந்தில்குமரனும் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, படிக்க ஊக்குவித்தார். இவர்கள் இருவரும்தான் எனக்கு நவீன வாசிப்பை அறிமுகம் செய்தவர்கள்.

இதற்கிடையில், குமரகுரு கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் பணிக்குச் சேர்ந்தேன். சம்பாதிக்கத் தொடங்கியதும், புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்குவேன். அந்த சமயத்தில், சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்றேன். அங்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் வரலாற்றுப் புத்தகங்கள் இருந்தன. ஆனால், கோவை வரலாறு தொடர்பான புத்தகம் ஒன்றுகூட இல்லை. கோவைக்கு திரும்பிவந்து விசாரித்தபோதும், சரியான விவரம் கிடைக்கவில்லை. இன்டர்நெட்டிலும் அப்போது மிகக் குறைந்த அளவிலான தகவல்களே இருந்தன. எனது அப்பாவிடம் கேட்டபோது, கோவை கிழார் என்பவர் கொங்குநாட்டு வரலாறு எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் புத்தகத்தை தேடிப் பார்த்து படித்தபோது, 1900-ம் ஆண்டுகள் வரையிலான வரலாறே இருந்தது.

எனவே, கோவையைப் பற்றி ஒரு பதிவு செய்யலாம் எனக் கருதி, 2006-ம் ஆண்டில் தகவல் திரட்டத் தொடங்கினேன். இதற்காக பல கள ஆய்வுகளை மேற்கொண்டேன். பலரது வாழ்க்கை வரலாற்று நூல்களைத் திரட்டினேன். பலரது வீட்டுக்குச் சென்று, பேட்டிகளை எடுத்தேன். ஏறத்தாழ 2 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு எழுதத் தொடங்கியதில், 700 பக்கங்களுக்குமேல் வந்துவிட்டது. இவ்வளவு பெரிய புத்தகத்தை வாசகர்கள் படிப்பது சிரமம் எனக் கருதி, அவற்றை சுருக்கி 250 பக்கங்களாக்கினேன்.

புத்தகத்துக்காக ராஜினாமா!

`கோயம்புத்தூர் ஒரு வரலாறு’ என்ற நூலை  2008 டிசம்பர் மாதம் வெளியிட முடிவுசெய்தேன். ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு புத்தகம் வெளியிடுவது சரியாக இருக்காது என்ற காரணத்தால், பணியை ராஜினாமா செய்தேன். பின்னர், இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் புத்தகம் வெளியானது. அந்த அரங்கிலேயே 300 பிரதிகள் விற்பனையாகின. இந்த புத்தகம் தொடர்பாக `தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, பெரிய அளவுக்கு அங்கீகாரமும், வரவேற்பும் கிடைத்தது.

தொடர்ந்து பல இடங்களில் கோவையைப் பற்றிப் பேச அழைத்தார்கள். ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொருபுறம் சரியான, ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற பயமும் ஏற்பட்டது. இதனால் இன்னும் நிறைய படிக்கவும், தகவல்கள் திரட்டவும்  தொடங்கினேன்.

சிறுவாணியின் வரலாறு...

2009-ல் சிறுவாணி நதியைப் பற்றிய தகவல்கள் திரட்டத் தொடங்கினேன். நதி உற்பத்தியாகும் இடம், கோவை, சென்னையில் உள்ள ஆவணக் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் செல்லத் தொடங்கினேன். 

இதில் பல சிரமங்கள் இருந்தன. எனினும், பல தகவல்களைத் திரட்டி, புத்தகத்தை வெளியிட்டேன்.
தொடர்ந்து, கோவை கிழார், பெரியநாயக்கன் பாளையம், கோவையும் போக்குவரத்தும், தெங்குமரஹடா, கோவையும் சினிமாவும், கோவைக்கும் தொழில் என்று பேர், ஆர்.எஸ்.புரம் அன்றும் இன்றும், கணபதி மாநகரின் கதை, ஆட்டோமேடிக் ஆட்டாங்கல் ஆகிய புத்தகங்களை எழுதினேன். கோவை குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என பலரும் கேட்டுக்கொண்டதால், ‘கோயம்புத்தூர் சைக்ளோபீடியா’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். கோவையைப் பற்றி 100 புத்தகங்கள் எழுதி வெளியிட வேண்டுமென்பதே எனது லட்சியம். 

தற்போது ஆங்கிலத்தில் கோவை வரலாற்று நூலை எழுதி வருகிறேன். அதேபோல, கோவை அருங்காட்சியகம் குறித்தும், பேரூர் குறித்தும் புத்தகங்கள் வெளியிட உள்ளேன். அதேபோல, கொங்குநாட்டு சொல்லகராதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது  வரை 3,500 வார்த்தைகளைத் திரட்டியுள்ளேன். சுமார் 5 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சொல்லகராதியாக அது வெளிவரும்.  மனைவி நாகரத்தினா, மகன் ஸ்ரீகாந்த், மகள் சரண்யா என குடும்பத்தினரின் ஒத்துழைப்பே, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர உதவுகிறது. 

அதேபோல, எனது நண்பர்கள் தொடங்கி, இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர்கள் டி.பாலசுந்தரம், டி.நந்தகுமார், வனிதா மோகன் போன்றோர்வரை பெரிதும் ஊக்குவித்தனர்” என்றார் நெகிழ்ச்சியுடன் சி.ஆர்.இளங்கோவன்

- ஆர்.கிருஷ்ணகுமார்

SCROLL FOR NEXT