மக்களவையில் முத்தலாக் மசோதாவை ரவீந்திரநாத் ஆதரித்தது ஏன் என்பது குறித்து அன்வர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்வதற்கு கணவர்கள் தலாக் கூறும் முறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு தடைவிதித்து, சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்ட மசோதா- 2019 மக்களவையில் கடந்த 16-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து காலாவதியானது.
இருப்பினும் அவசரச்சட்டத்தை மத்திய அரசு பிப்ரவரி 21-ம் தேதி பிறப்பித்து இருந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்ட மசோதா-2019 உருவாக்கப்பட்டு கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவை மக்களவையில் அதிமுக எம்பி, ஓ.பி.ரவீந்திரநாத் சட்டத்தை ஆதரித்தார். முந்தைய 16-வது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்த நிலையில், ஓபி.ரவீந்திரநாத் ஆதரித்தது விமர்சனத்துக்கு உள்ளானது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, ''மத்திய அரசு மசோதாக்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என எண்ணுகிறது. இதனால், அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்ற எண்ணி, மசோதாக்களை உறுப்பினர்களுக்கு சரியாகத் தரவில்லை.
இதனால் கால தாமதம் ஏற்பட்டு, உறுப்பினர்களால் சரியாகப் படித்துவிட்டு அவையில் பேசமுடியாமல் போகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களே மாநிலங்களவையில் புகார் கொடுத்துள்ளனர். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அந்தத் தகவலைச் சரியாகப் பெறமுடியாமல், ரவீந்திரநாத் அவ்வாறு பேசிவிட்டார்.
அவ்வளவுதான். அவரை மீண்டும் கேட்டால் முத்தலாக் மசோதாவை எதிர்த்துப் பேசுவார். அவர் வாய்தவறி அப்படிச் சொல்லிவிட்டார் என்று எடுத்துக்கொள்ளலாம். முத்தலாக் மசோதா தனி மனித உரிமைகளுக்கு எதிரானது. உரிமை மீறல் இது. சிறுபான்மை சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.
ஒரு நாட்டின் அரசன், மக்களின் மீது போர் தொடுப்பானா? அதுபோல இந்த அரசு இஸ்லாமிய மக்கள் மீது போர் தொடுத்துள்ளது. இதை ஏற்கெனவே மக்களவையில் தெரிவித்துள்ளது. திருமண ஒப்பந்தம் சிவில் விவகாரம். இதற்கு சிறை தண்டனை வழங்கமுடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு எந்த பதிலையும், விளக்கத்தையும் அளிக்கலாம்.
மணவிலக்கு முறிவுக்காக ஒருவரை சிறையில் 3 ஆண்டுகள் அடைப்பதும் தண்டனை வழங்குவதும் சரியா? கணவனை சிறையில் அடைத்துவிட்டு மனைவிக்கு எப்படி ஜீவனாம்சம் தரமுடியும்? மனைவியை யார் காப்பாற்றுவது என்பதற்கு இந்த மசோதாவில் சரியான பதில் இல்லை. இது பழிவாங்கும் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட மசோதாதான் என்பதை நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துள்ளோம்.
இதனால் இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. ஒரே முறையில் தலாக் சொன்னால், மண முறிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படியெனில், மண முறிவு நடக்காத கணவனை எப்படிச் சிறையில் அடைக்க முடியும்?'' என்று பேட்டி அளித்துள்ளார் அன்வர் ராஜா.