தமிழகம்

முத்தலாக் மசோதாவுக்கு சிறுபான்மையினப் பெண்கள் மிகுந்த வரவேற்பு: தமிழிசை

செய்திப்பிரிவு

சென்னை

முத்தலாக் மசோதாவுக்கு சிறுபான்மையினப் பெண்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த பள்ளிக்கரணையில், பாஜக இளைஞரணி சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழிசை, ''முத்தலாக் விவகாரம் சிறும்பான்மையினப் பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை பாஜக உறுப்பினர்கள் சேர்க்கையில் நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். இஸ்லாமிய சகோதரிகள் தாமாக முன்வந்து, உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்கின்றனர். 

கர்நாடகா போல இங்கும் ஆட்சிக் கலைப்பு ஏற்படும் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஜனநாயகத்துக்கு எதிராக பாஜக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அதேபோல இன்றைய காலகட்டத்தில் நேர்மையான, நேர்மறையான அரசியலை எடுத்துச் செல்வதில் பாஜக முக்கியமான கட்சியாக இருக்கிறது'' என்றார் தமிழிசை.

முத்தலாக் என்பது, முஸ்லிம் ஆண் ஒருவர் தனது திருமண பந்தத்தை எந்த முன்னறிவிப்பு இல்லாமலும், அவசரகதியிலும் முறித்துக்கொள்ள வழிவகுக்கும் தன்னிச்சையான ஒன்று. மூன்று முறை தலாக் சொல்லி, திருமணத்தையே முறித்துக்கொள்வதே முத்தலாக் எனப்படுகிறது. இதில் திருமண பந்தத்தைக் காப்பாற்றும் வகையில் சமரச முயற்சிகளுக்கு இடமில்லை.

இந்நிலையில் ஆளும் பாஜக அரசு, கடந்த முறை ஆட்சி செய்யும்போதே, முஸ்லிம் பெண்களை தலாக் முறையில் இருந்து காக்கும் முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த முத்தலாக் தடைச் சட்ட மசோதாவின்படி, பெண்களை தலாக் செய்யும் முஸ்லிம் ஆண்களுக்கு சிறை தண்டனை அளிக்கும் அம்சத்தை வைத்திருந்தது. இந்த அம்சத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். 

கடந்த முறை காலாவதியான முத்தலாக் தடை மசோதா, இம்முறை மக்களவையில் நிறைவேறியது. இதுதொடர்பான விவாதம் இன்று மாநிலங்களவையில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT