தமிழகம்

8 வழிச்சாலை: சோறும் நீரும் தரும் விவசாயிகளைக் குறித்து ஏன் கவலைப்படவில்லை?- சீமான் கேள்வி

செய்திப்பிரிவு

வாணியம்பாடி,

காரில் செல்பவர்களைப் பற்றிக் கவலைப்படும் அரசு, சோறும் நீரும் தரும் விவசாயிகளைக் குறித்து ஏன் கவலைப்படவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக  ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தேர்தலைப் புறக்கணித்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். 

அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாணியம்பாடியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''இந்த அரசால் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய முடியாது. வேளாண்மை நசிந்து நாசமாகிக் கொண்டிருக்கிறது. வேளாண் குடிமக்கள் செத்துக் கொண்டிருப்பதைத் தடுக்க முடியாது. கல்வியைத் தனியார் மயமாக்கி, அதை மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக்கியுள்ளதை மத்திய, மாநில அரசுகளால் சரி செய்ய முடியாது. 

உயிர் காக்கும் மருத்துவம் விற்பனைப் பண்டமாகவும், உயர்ந்த சந்தையாகவும் மாறிவிட்டதைத் தடுக்க முடியாது. அதை நோக்கித்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பெரிய சந்தை விரிவாக்கத்துக்கு அது வழி செய்கிறது. 

எட்டு வழிச் சாலை ஏன் போடுகிறீர்கள்? சீக்கிரம் சென்னைக்குச் செல்லவேண்டும் என்பதற்காக. காருக்குள் இருக்கிறவன் குறித்துக் கவலைப்படுகிற ஆட்சியாளர்கள், காருக்குள் இருப்பவனுக்கு நீரும் சோறும் கொடுக்கிற விவசாயிகளைக் குறித்து ஏன் கவலைப்படவில்லை?'' என்றார் சீமான். 

SCROLL FOR NEXT