காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது 7 நாளில் முதல் கட்ட விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நேரு நகரைச் சேர்ந்தவர் சீனி. நத்தம் வேலம் பட்டியில் இருந்த இவருக்குச் சொந்தமான நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் ரூ. 11.61 லட்சத்துக்கு விலை பேசி வாங்கிக் கொண்டு, ரூ. 10 லட்சத்தை தராமல் ஏமாற்றி விட்டாராம்.
இதையடுத்து, ஈஸ்வரன் மீதும், அவர் மனைவி மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் குற்றப் பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதி மன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.எம். அக்பர் அலி பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல் நிலை யங்களில் அளிக்கப்படும் புகாரின் மீது 7 நாளில் முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும். முதல் கட்ட விசாரணை நடத்துவது தொடர் பாக புகார்தாரருக்கும், குற்றம் சாட்டப்பட்ட தரப்பினருக்கும் போலீஸார் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
விசாரணையில், குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்தி ரம் இருந்தால் வழக்குப் பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாந்திரம் இல்லாமல் புகார் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், புகார் முடிக்கப்பட்டதற்கான அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை இந்த வழக்கில் போலீஸார் பின்பற்ற வேண்டும்.