சென்னை
மெட்ரோ ரயில் பணிக்காக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்ட சென்னை அண்ணா சாலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு வழிப் பாதையாகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அண்ணா சாலை பகுதியில் மெட்ரோ ரயிலுக் கான சுரங்கப் பாதை அமைப்ப தற்காக, எல்ஐசியில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணா சாலை மூடப்பட்டு ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ்அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக அண்ணா சாலை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக தூரம் கடக்க வேண்டி இருந்தது.
ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் நோக்கி செல்லும் எதிர் மார்க்கம் மட்டும் ஒருவழிச் சாலையாக இயங்கி வந்தது. இந்நிலை யில், அண்ணா சாலை மார்க்கத் தில் மெட்ரோ சுரங்கப் பாதை பணி கள் முடிந்து, ரயில்கள் இயக்கமும் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, சில இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் மட்டும் நடந்து வந்தன. அந்த பணிகளும் முடிவடைந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலையை மீண்டும் இருவழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணி தற்போது நடந்து வருகிறது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண் தலைமையில் நேற்று நடந்தது. இதில், போக்குவரத்து இணை ஆணையர்கள் எழில் அரசன், ஜெயகவுரி கலந்துகொண்டனர். அண்ணா சாலை இருவழிப் பாதையாக மாற்றப்படுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆணையர் தகவல்
அதேபோல, மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அண்ணா சாலை நந்தனம் சிக்னல் பகுதியிலும் கடந்த 2011 முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இங்கும் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததை அடுத்து, ஏற்கெனவே இருந்ததுபோல போக்குவரத்தை மாற்றி கடந்த 26-ம் தேதி சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது மக்களுக்கு வசதியாக இருப்பதால் நந்தனம் சந்திப்பில் கீழ்க்கண்டபடி போக்குவரத்து மாற்றம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நேராக (அண்ணா சாலை), இடதுபுறம் (வெங்கட் நாராயணா சாலை), வலதுபுறம் (சேமியர்ஸ் சாலை) ஆகிய 3 பக்கமும் செல்லலாம். வெங்கட் நாராயணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேராக (சேமியர்ஸ்), இடது (அண்ணா சாலை), வலது (சைதை) என மூன்று பக்கமும் செல்லலாம். அதேபோல, சேமியர்ஸ் சாலையில் இருந்து வாகனங்களும் நேராக (வெங்கட் நாராயணா), இடது (சைதை), வலது (தேனாம்பேட்டை) என மூன்று பக்கமும் செல்லலாம். தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரும் வாகனங்களும் வழக்கம்போல அனுமதிக்கப்படும்.
இவ்வாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.