தமிழகம்

கீழடி அகழாய்வில் 4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிப்பு 

இ.ஜெகநாதன்

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் நேற்று 4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதைப் பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக் கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. 

தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் குழிகள் தோண்டியதில் மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன. முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் குழிகள் தோண்டியபோது இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைச் சுவரின் தொடர்ச்சியைக் கண்டறிய தொல்லியல்துறையினர்  இரண்டு வாரங்களுக்கு முன் ஜிபிஆர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

மேலும், மாரியம்மாள் என்பருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு குழியில் 3 அடி அகல சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முருகேசனுக்குச் சொந்தமான நிலத்தில் இரட்டைச் சுவருக்கு அருகிலேயே 4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து உறைகள் இருந்தன. இதில் ஒன்று சேதமடைந்திருந்தது. இதனால் இப்பகுதியில் மேலும் பல உறைகிணறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT