சென்னை
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில்,
"வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்.
இந்த மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 4 செ.மீ., நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கத்தைக் காட்டிலும், 27 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தில் 13 செ.மீ. பெய்ய வேண்டிய மழை, 9 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. சென்னை மற்றும் திருவண்ணாமலையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளது.
சென்னையில் 17 செ.மீ. பெய்ய வேண்டிய மழை 25 செ.மீ. அளவுக்கு பெய்துள்ளது. திருவண்ணாமலையில் 15 செ.மீ. பெய்ய வேண்டிய மழை, 26 செ.மீ. அளவுக்கு பெய்துள்ளது. மதுரையில் 55%, கோவையில் 74%, தூத்துக்குடியில் 71%, பெரம்பலூரில் 65%, ராமநாதபுரத்தில் 67% குறைவாக மழை பெய்துள்ளது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.