த.சத்தியசீலன்
வலிமையை காட்ட பேனா போதும்; ஆயுதம் வேண்டாம் என்று, சமூக ஊடகங்களில் ‘மீம்ஸ்' வெளியிட்டு, மாணவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை அறிவுரை கூறியுள்ளது.
இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ‘ஹீரோயிசம்' அதிகரித்து வருகிறது. மற்றவர் களைக் காட்டிலும் தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக் கொள்ளவும் முயல்கின்றனர். இதன் விளைவாக சக மாணவர்களிடையே ‘ஈகோ' பிரச்சினை ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறுகிறது. ஒருவருக்கொருவரோ அல்லது குழுக்களாகவோ மோதிக் கொள் ளும் அவலம் ஏற்படுகிறது. அனை வராலும் மதிக்கத்தக்க, போற்றத் தக்க மாணவ சமுதாயத்தில், சிலர் சமூக விரோதிகளைப்போல் பொதுவெளியில் மோதலில் ஈடுபடு வது, அவர்கள் மீதான நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்கிறது.
முன்பெல்லாம் வெறும் கைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட மாணவர்களின் சிறுபிள்ளைத்தனமான சண்டை கள், இன்று பயங்கர ஆயுதங்களு டன் தாக்கிக் கொள்வதுடன், பொது மக்களுக்கும் அச்சுறுத்துலை ஏற்படுத்துவதாக உள்ளது.
மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்தாமல் அவர்களிடையே உள்ள பிரச்சினைகளைக் கண் டறிந்து அறிவுரை கூறி நல்வழிப் படுத்தாத கல்வி நிறுவனங்களும், பெற்றோரும் ஒருவகையில் காரணமாகின்றனர்.
கடந்த 23-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தல' ஈகோ பிரச்சினையில் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களு டன் தாக்கிக் கொண்டனர். இந்த காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்த்தவர்களைப் பதைபதைக்கச் செய்ததே இதற்கு உதாரணம்.
இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் தமிழகத்தின் எந்த ஒரு மூளையிலும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாணவர்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் மாநகரக் காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மேற்கு மண்டல காவல்துறையின் சமூக ஊடகப் பிரிவு, ‘பயிலும் வயதில் பண்பைக் கற்றுக்கொள், உன் வலிமையை காட்ட பேனா போதும்; ஆயுதம் தேவை இல்லை, மாணவர்கள் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு, வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்' உள்ளிட்ட மீம்ஸ் வாச கங்களை வெளியிட்டு, விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதை மேற்கு மண்டல காவல் துறையை முகநூலில் பின்தொட ரும் சுமார் 8 ஆயிரம் நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர்.
இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா கூறும்போது, ‘நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற் காகவே மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர். மாணவர் களின் பயணம் தங்களுடைய எதிர் காலத்தை நோக்கியதாக அமைய வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. அவற்றில் இருந்து விலகிச் செல்ல வேண்டும்.
தங்கள் நிலையையும், குடும்பச் சூழலையும் உணர்ந்து செயல்பட வேண்டும். படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் உயர்ந்த அரசு பதவிகளுக்கு வரும்போது அந்தஸ்தும், கவுரவமும் தானாக உயரும். அதுவே நிரந்தரமானது.
கல்லூரியில் படிக்கும் வயதில் தோன்றும் ‘தான் தான் பெரியவன்' என்ற மாயை போலியானது. இதை உணர்ந்து, ஆரோக்கியமான எண்ணங்களுடன் நல்வழியில் பயணிக்க வேண்டும்' என்றார்.