வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர். உடன், மண்டல வனப் பாதுகாவலர் மஞ்சுநாதா, மாவட்ட வன அலுவலர் சுஜாதா உள்ளிட்டோர். 
தமிழகம்

வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி வளர்ச்சி பெறுமா வண்ணத்துப்பூச்சி பூங்கா? - புதிய திட்டங்கள் இல்லாததாலும், பராமரிப்பின்மையாலும் பார்வையாளர்கள் அதிருப்தி

செய்திப்பிரிவு

அ.வேலுச்சாமி

புதிய திட்டங்கள் இல்லாததாலும், போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் ரங்கம் அருகே மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இப்பூங்காவை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக வனத்துறை சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் கடந்த 5.9.2018-ம் தேதி இங்கு ஆய்வு செய்து, வண்ணத்துப்பூச்சி புழுக்கள் முட்டையிடக்கூடிய தாவரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டும். பூங்காவின் ஈரப்பதத்தை அதிகரிக்க நீருற்று, நீர்வீழ்ச்சிகளை அதிகரிக்க வேண்டும். பள்ளிக்கல்வி, உயர் கல்வித்துறையுடன் இணைந்து வண்ணத்துப் பூச்சிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அதிக ளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பூங்கா நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும் வகையில் இங்கு மரக்கன்றுகளை வளர்த்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மீதமுள்ள பகுதியிலும் விரிவாக்கம் செய்யலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்தனர். அதன்பின் 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் அண்மையில் இங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்டல வனப் பாதுகாவலர் மஞ்சுநாதா, மாவட்ட வன அலுவலர் சுஜாதா, வண்ணத்துப்பூச்சி பூங்கா வனச் சரகர் முருகேசன் உள்ளிட் டோருடன் ஆலோசனை நடத்திய அவர், ‘‘பூங்காவில் அபிவிருத்திப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பராமரிப்பு செலவை ஈடுகட்டும் அளவுக்கு வருவாயை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும். பூங்காவுக்குத் தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தி மூலம் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொலிவிழந்து வரும் பூங்கா

இது ஒருபுறமிருக்க புதிய திட்டங்கள் இல்லாததாலும், பராமரிப் பின்மையாலும் பூங்காவின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வண்ணத் துப்பூச்சி ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆசியாவின் பெரிய வண்ணத் துப்பூச்சி பூங்காவான இங்கு, வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். ஆனால், நாளுக்குநாள் பொலிவிழந்து வருவதையே பார்க்க முடிகிறது. வண்ணத்துப் பூச்சிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்களை அதிகளவில் வளர்க்க ஆர்வம் காட்டாததால், அதன் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

பூங்கா பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. பல இடங்களில் தாவரங்கள் நீரின்றி வாடிக் கிடக்கின்றன. உள் அரங்கம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. வண்ணத்துப்பூச்சி வகைகள், அவற்றின் குடும்பம் உள்ளிட்டவற்றை விளக்கும் தகவல் பலகைகள் போதுமானதாக இல்லை. மேலும், அதுகுறித்த கையேடும் பார்வையாளர்களுக்கு அளிக்கப் படுவதில்லை.

நிறுத்தப்பட்ட சான்றிதழ் படிப்பு

வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சி யாளர் பணியிடங்கள் 4 உள்ள நிலையில், 2 பேர் மட்டுமே உள்ளனர். மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் இங்கு நடத்தப்பட்டு வந்த சான்றிதழ் படிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் போதுமானதாக இல்லை. பெரியவர்களும் விளை யாடும் வகையில் ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்க வேண்டும். பெரியவர்களையும் படகு சவாரிக்கு அனுமதிக்க வேண்டும். செயற்கை நீரூற்றுகளை முறையாக பராமரித்து தினமும் பயன்பாட்டில் இருக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக, பூங்காவுக்கு வந்து செல்ல பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்றனர்.

விரைவில் கையேடு வெளியீடு

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் குறைந்துவிட்டதாக சொல்ல முடியாது. தற்போதுள்ள எண்ணிக் கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. பராம ரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தகவல் பலகைகள் கழற்றி வைக்கப்பட்டுள்ளன. புதுப் பொலிவுடன் விரைவில் மீண்டும் பொருத்தப்படும்.

நீரூற்று, நீர்வீழ்ச்சிகள் தினமும் இயங்கவும், நிறுத்தப்பட்டுள்ள சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பூங்கா வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வண்ணத்துப் பூச்சிகள் குறித்த கையேடு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகி வருகிறது. விரைவில் அதனை வெளியிட திட்டமிட்டுள்ளோம். பூங்காவில் காலியாக உள்ள 2 ஆராய்ச்சியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

சத்திரம், மத்திய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். மிக விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

SCROLL FOR NEXT