விழுப்புரம்
பாமகவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் விரைவில் பாமகவிற்குத் திரும்புகின்றனர் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை புதுச்சேரி முன்னாள் முதல்வரான என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, புதுவை மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சபாபதி ஆகியோர் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து முத்துவிழா வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு முத்துவிழா மலரை ராமதாஸ் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்த ரங்கசாமியிடம் செய்தியாளர்கள், புதுச்சேரியை ஆளும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னாள் முதல்வரான உங்களின் கருத்து என்ன? என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் ரங்கசாமி புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாமகவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் விரைவில் பாமகவிற்குத் திரும்புகின்றனர்'' என்றார்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்கள் ராமதாஸுக்கு முத்து விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.