திருநாவுக்கரசர்: கோப்புப்படம் 
தமிழகம்

கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தது ஜனநாயக படுகொலை: திருநாவுக்கரசர் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை

கர்நாடகத்தில் பாஜக ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியிருப்பதாக, மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. 

இதையடுத்து, முதல்வராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், குமாரசாமி தலைமையிலான 14 மாத கால ஆட்சி கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை நேற்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். இதனையடுத்து கர்நாடகா முதல்வராக எடியூரப்பா, நேற்று மாலை பதவியேற்றார்.

இதுதொடர்பாக நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி, திருநாவுக்கரசர், "மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக, சில எம்எல்ஏக்களை மாற்றி, அதன்மூலம் ஆட்சி மாற்றத்தை உருவாக பாஜக முயற்சிக்கிறது.

ஒவ்வொரு மாநிலமாக இந்த முயற்சி நடக்கிறது. கோவா, வடமாநிலங்களில் ஆரம்பித்து, இப்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய ஜனநாயக படுகொலையை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது", என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT