சேலம்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 7,200 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாட்களாக விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 7,200 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட் டுள்ளது. நீர் திறப்பை காட்டிலும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணை நீர் மட்டம் 41.15 அடியாக இருந்தது, நேற்று காலை நிலவரப் படி அணை நீர்மட்டம் 42.14 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 13.21 டிஎம்சி-யாக உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறு கின்றனர்.
ஒகேனக்கல்லில் புது வெள்ளம்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை விநாடிக்கு 7,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புது வெள்ளத்தால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் நுரையுடன் பொங்கி வழிந்தோடுகிறது.