தமிழகம்

வாட் வரி, முத்திரை தீர்வை உட்பட நிலுவையில் உள்ள ரூ.30,000 கோடியை வசூலித்தால் வருவாய் பற்றாக்குறை நீங்கும்: தமிழக அரசுக்கு இந்திய கணக்கு தணிக்கை துறை ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை

வாட் வரி, முத்திரை தீர்வை, பதிவுக் கட்டணம் உள்ளிட்ட வகைகளில் நிலுவையில் உள்ள ரூ.30 ஆயிரம் கோடியை வசூலித்தாலே தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்று இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018 மார்ச் வரையிலான இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 2013-14 நிதியாண்டில் ரூ.1,788 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.21,594 கோடியாக உயர்ந்தது. ஆனால், அந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட இலக்கான ரூ.15,930 கோடி என்ற அளவுக்குள் வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்த இயலவில்லை.

அதே நேரம், பட்ஜெட் மதிப்பீடுகளின்படி நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடிக்கு பதிலாக, ஆண்டு இறுதியில் ரூ.39,840 கோடி அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், நிலுவையில் உள்ள தொகைகளை அரசு வசூலித்தால் இந்த வருவாய் பற்றாக்குறையை குறைக்க முடியும்.

வருவாய் நிலுவைகளை பொறுத்தவரை, வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரியின் கீழ் இதுவரை ரூ.28,938 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல, முத்திரை தீர்வை, பதிவுக் கட்டணம் வாயிலாக ரூ.395 கோடி, வாகனங்கள் மீதான வரிகள் வகையில் ரூ.1.45 கோடி, மின்சார வரிகள் மூலம் ரூ.744 கோடி என ரூ.30,078 கோடி நிலுவையில் உள்ளது.

இதில், ரூ.16,067 கோடி மீட்பு நிலையில் உள்ளது. ரூ.9,789 கோடி நிலுவைத் தொகை மீது நீதிமன்ற தடை ஆணைகள் உள்ளன. இதை தவிர்த்து, ரூ.4,220 கோடியை மீட்க நடவடிக்கைகள் தொடங்க வேண்டும். இவ்வாறு நிலுவையில் உள்ள தொகைகளை வசூலித்தாலே, மாநில வருவாய் பற்றாக்குறையை குறைக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

2017-18 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.21,594 கோடியாக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.26,004 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த 2019-20 நிதியாண்டில் மே மாதம் வரை வருவாய் பற்றாக்குறை ரூ.4,773 கோடி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT