கோப்புப்படம் 
தமிழகம்

ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண்ணுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை

ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண்ணுக்கு 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த அப்பாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் தேதி ஹெச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

சிவகாசி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படாததே இதுபோன்ற நிகழ்வு நடைபெற காரணம். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 8 லட்சம் நபர்களால், தானமாக அளிக்கப்படும் ரத்தம், ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்து கொள்வோர், வயதானவர்கள் என 12 லட்சம் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு தானமாக வழங்கப்படும் ரத்தம் ஹெச்ஐவி, மஞ்சள் காமாலை, மலேரியா, சிபிலிஸ் ஆகிய நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் முறையாக பரிசோதிக்கப்பட்டு ரத்தம் தானமாக பெறப்பட வேண்டும்.

ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த பணியிடம் காலியாகவே உள்ளது.   பாதுகாப்பான முறையில் ரத்தம் மாற்று செய்வதற்கான உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில்  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக  உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்", என கோரியிருந்தார். 

மேலும், "எய்ட்ஸ் தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சையும் உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும். ரத்த மாற்று சிகிச்சை மூலமாக ஹெச்ஐவி பரவுவதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும், மக்களின் நலன் கருதி தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாக பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனவும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தனர்.  இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள்," பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்ச ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

10 லட்ச ரூபாயை பெண்ணின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதமுள்ள 15 லட்ச ரூபாயை மைனரான இரு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் மேஜரான பின்பே இந்த தொகையை எடுக்க இயலும் வகையில் டெபாசிட் செய்ய வேண்டும்.  

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறைகளைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என உத்தரவிட்டனர். 

ஆற்றுப்படுத்துநர், ஆய்வக தொழில்நுட்பனர், ரத்த வங்கி தொழில்நுட்பனர், செவிலியர்கள் பணியிடங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.  தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகள், ART மையங்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.

அவற்றின் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளனவா? அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கின்றனரா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். ரத்தம் வழங்குதல், பெறுதலை பாதுகாப்பானதாக மேற்கொள்ள வல்லுநர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குதல் தொடர்பாக உரிய பயிற்சி அளித்து பணியாளர்களை நியமிக்க வேண்டும், உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஜனவரி 11-ல் தாக்கல் செய்ய வேண்டும்  என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

-கி.மகாராஜன்

SCROLL FOR NEXT