துரைமுருகனின் மகன் வேலூர் இடைத் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ''திமுகவுக்கு ஓட்டு போட்டோம். கல்விக் கடனை ஏன் ரத்து செய்யவில்லை?, நகைக்கடன், விவசாயக் கடன்கள் தள்ளுபடி ஆகாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் திமுகவை நோக்கிக் கேட்கின்றனர்.
திமுகவிலேயே உட்கட்சிப் பிரச்சினை இருக்கிறது. துரைமுருகனின் மகன் வெற்றி பெறக் கூடாது என்று உதயநிதியின் ஆதரவாளர்கள் வேலை பார்க்கவில்லை. இதனால் உணர்ச்சிபூர்வமாக அழுதுகொண்டிருக்கிறார் துரைமுருகன். கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் விடும் ஆஸ்கர் நடிகர் அவர். கட்சிக்காரர்கள் அவருக்காக வேலை செய்யவில்லை.
முஸ்லிம் சமூகத்தினர் தெளிவாக உள்ளனர். அவர்களுக்குத் திமுக மீது நம்பிக்கையுடன் இல்லை. திமுகவில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. அவர்கள் இஸ்லாமியர்கள் குறித்து வாய்கிழியப் பேசுவார்களே தவிர, ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் அதிமுக அப்படிக் கிடையாது. இங்கு கடைக்கோடித் தொண்டனுக்குக் கூட உயர்வு கிடைக்கும்.
துரைமுருகன் அவரின் சாதி ஓட்டுகளை மட்டுமே நம்பி இருக்கிறார். அதுவும் அவரைக் கைவிட்டுவிடும். வேலூர் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். திமுகவினர் தண்ணீராய் பணத்தை செலவு செய்தாலும் அவர்களுக்கு வெற்றி என்பது எட்டாக் கனிதான்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.