எம்.சரவணன்
புதுடெல்லி
தமிழகத்தில் இருந்து மாநிலங்கள வைக்குத் தேர்வான டி.ராஜா, வி.மைத்ரேயன் உள்ளிட்ட 5 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறை வடைந்தது. நிறைவு நாளான நேற்று மாநிலங்களவையில் உருக்கமான உரையுடன் விடைபெற்றனர்.
தமிழகத்தில் இருந்து கடந்த 25-7-2013-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா (இந் திய கம்யூனிஸ்ட்), கனிமொழி (திமுக), டாக்டர் வி.மைத்ரேயன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக) ஆகி யோரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. இதில் கனிமொழி மக்களவை உறுப்பின ராக தேர்வானதால் ஏற்கெனவே ராஜினாமா செய்து விட்டார். மீதமுள்ள 5 உறுப்பினர்களுக்கும் நேற்று மாநிலங்களவையில் பிரிவு உபசார நிகழ்வு நடைபெற்றது.
மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு பேசுகையில், "இன்று ஓய்வுபெறும் டி.ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட 5 உறுப் பினர்களும் மாநிலங்களவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங் களில் பங்கேற்று சிறப்பான பங் களிப்பைச் செய்துள்ளனர். நாடாளு மன்றத்தில் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்து நாடாளுன்ற ஜனநாயகத்தையும், மாண்பையும் காப்பாற்றியுள்ளனர்.
தமிழகம் மற்றும் தேசிய முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் சிறப்பான வாதங்களை முன்வைத் தனர். அவர்களை இந்த அவை இழக் கிறது. பதவிக்காலம் நிறைவடையும் 5 உறுப்பினர்களும் நல்ல உடல் நலம், மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்" என்றார்.
பின்னர் பேசிய மாநிலங்களவை முன்னவரும், மத்திய அமைச்சரு மான தாவர்சந்த் கெலாட், "இன்று ஓய்வுபெறும் 5 பேரும் மாநிலங்களவையில் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்துள்ள னர். மக்களுக்காக இந்த அவையில் சிறப்பாகவும், அர்ப்பணிப்பு உணர் வுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச் சிக்கு துணைநின்ற ஐவரையும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்" என்றார்.
மேலும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோரும் 5 பேருக்கு வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்தனர்.
மைத்ரேயன் கண்ணீர்
அதிமுக உறுப்பினர் டாக்டர் வி.மைத்ரேயன் பேசும்போது, "மாநிலங்களவையில் பதினான் கரை ஆண்டுகால நீண்ட சேவைக் குப் பிறகு ஓய்வு பெறுகிறேன். என் மீது நம்பிக்கை கொண்டு 3 முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய ஜெயலலிதாவுக்கு நன்றி. இந்த அவையில் பல்வேறு முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப் பட்டபோது விவாதங்களில் பங்கேற் றுள்ளேன். 2009-ம் ஆண்டு மே மாதம் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இலங் கையில் இனப்படுகொலை செய்யப் பட்டபோது இரங்கல் தெரிவிக்க இந்த அவை முன்வரவில்லை. இது எனது நெஞ்சில் தைத்த முள்ளாக உள்ளது. தமிழ் ஈழத்தின் சகோதர, சகோதரிகளுக்குக் காட்டவேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வைக்கூட இந்த அவை காட்டவில்லை. எனவே, நான் இறந்தால் இந்த அவையில் எவ்வித இரங்கல் தீர்மானமோ, மவுன அஞ்சலியோ செலுத்த வேண்டாம்" என்றார். மைத்ரேயன், தனது உரையின்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் மல்கப் பேசினார்.
மாநிலங்களவையில் 12 ஆண்டு கள் பதவி வகித்த டி.ராஜா, கடந்த 21-ம் தேதி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார். அவருக்கும் மாநிலங்கள வைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
வெங்கய்ய நாயுடு பேசும் போது, ‘‘ராஜா, இப்போது மகாராஜா வாகி விட்டார். இந்திய கம்யூ னிஸ்ட் தேசிய பொதுச்செயலாள ராகியுள்ள அவருக்கு வாழ்த்துகள்’’ என்றார்.
டி.ராஜா பேசும்போது, "இந் தியா மிக உயர்ந்த ஜனநாயக நாடு. அதன் அடையாளமான நாடாளுமன்ற மாநிலங்களவையில் பணியாற்றியது பெருமை அளிக் கிறது. நான் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆனால், மக்களுக்காகவும், நாட்டுக்காகவுமான என் பணி எப்போதும் ஓயாது. ஈழத் தமிழர்கள் பிரச்சினை பற்றி பலமுறை இந்த அவையில் பேசியிருக்கிறேன். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை" என்றார்.
கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சு மணன், ரத்தினவேல் ஆகியோர் பேசும்போது, தங்களுக்கு ஒத்து ழைப்பு அளித்த மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர், உறுப் பினர்களுக்கு நன்றி தெரிவித் தனர்.