தமிழகம்

பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவோம்: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைவிட பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திறப்பு விழாக்களில் கலந்துகொண்ட ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து வீனஸ் நகரில் அங்கன்வாடி மையம் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் நகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் 97 ஆயிரம் புத்தகங்கள் அடங்கியுள்ள நூலகத்தைத் திறந்து வைத்துள்ளேன். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஹரிதாஸ் நகர் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் ஏற்கெனவே சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்துள்ளார். சுற்றியுள்ள பொதுமக்களும் சுகாதாரச் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டனர். எனவே, என்னுடைய சட்டப்பேரவை நிதியில் இருந்து ரூ.82 லட்சம் செலவில் குளத்தைச் சுத்தப்படுத்தியுள்ளோம். அதுவும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல 74 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு மீன்பாடி வண்டி, தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எவ்வளவு பெரிய வெற்றியை, எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோமோ, அதைவிட பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவோம்'' என்றார் ஸ்டாலின்.

SCROLL FOR NEXT