புதிய கல்விக்கொள்கை விவகாரம் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘புதிய கல்விக் கொள்கைக்கு நடிகர் சூர்யா, நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். புதிய கல்விக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது. அதற்குக் கலை உலகில் ஒளி வீசும் நட்சத்திரமான சூர்யா, தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆனால் அதற்கு வந்த எதிர்ப்புகள் நன்மையிலேயே முடிந்தன. இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும் என்ற ஷேக்ஸ்பியரின் வாசகம்தான் சூர்யா பிரச்சினையில் நடந்துள்ளது.
திருவள்ளுவர் சொன்ன மனிதநேயக் கண்ணோட்டம் அகரம் அறக்கட்டளையில் பிரகாசிக்கிறது. அதில் மூன்றாயிரம் மாணவர்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். பொறியியல், கலை அறிவியல், மருத்துவத் துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அகரத்தின் மூலமாக ஏற்றம் பெற்றனர். இதில் 90 % பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளும் சமூகப் பணிகளை, இதுவரை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அந்த அரிய சேவையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
போற்றுதலுக்கு உரிய சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்துக்குத் தோள் கொடுத்து உயர்த்துவர்’’ என்று வைகோ தெரிவித்துள்ளார்.