கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி , கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் , குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்தப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்”
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.