கந்துவட்டிக் கொடுமைகளில் இருந்து ஏழை மக்களை, தமிழக கிராம வங்கி விடுவித்துக் காப்பாற்றுகிறது என்று முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் வங்கிக் கடன் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி 31 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு ரூ.112 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
''கிராமங்களின் மீது அக்கறை கொண்ட வங்கி, தமிழக கிராம வங்கி. இங்கு எளிதில் கடன் பெற முடியும். விவசாயத் தேவைகளுக்கும் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் கிராம வங்கி பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வங்கியில் வட்டி குறைவாகவே இருக்கிறது. தேசிய வங்கிகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் இணையாக கிராம வங்கி செயல்பட்டு வருகிறது.
பொதுவாக வங்கியில் கடன் வாங்கிய யாரும் அதைத் திருப்பிச் செலுத்துவதில்லை. ஆனால் இந்தப் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்கள், 99 சதவீத கடன்களைத் திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். இதன்மூலம் தமிழ்நாடு கிராம வங்கியின் வாராக்கடன் குறைந்திருக்கிறது. இது சாமானிய மக்களின் நேர்மைக்கான சான்று.
கந்துவட்டிக் கொடுமைகளில் இருந்து ஏழை மக்களை, தமிழக கிராம வங்கி விடுவித்துக் காப்பாற்றுகிறது''.
இவ்வாறு தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.