படைப்பாளர்களை கௌர விக்கும் சமுதாயமே, உயர்ந்த சமுதாயமாகும். உரிய அங்கீகாரமே நல்ல படைப்புகளை வெளிக்கொணர்வதுடன், படைப்பாளிகளை ஊக்குவிக்கும். அப்போதுதான், இன்னும் நல்ல படைப்புகள் உருவாகும். அந்த வகையில், கோவையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கியது, படைப்பாளிகளை ஊக்குவிப்பதாக அமைந்தது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல் புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என்றும், இந்த விருது தலா ரூ.25,000 ரொக்கம் மற்றும் விருதுச் சான்றிதழும் அடங்கியது என்று ஏற்கெனவே கொடிசியா அறிவித்திருந்தது.
புனைவு நூல்களுக்கான பிரிவில் `கற்றாழைப் பச்சை’ நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் `தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…)’ நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் `விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி’ கவிதைத் தொகுப்புக்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு தலைமை வகித்த எழுத்தாளர் வண்ணநிலவன் பேசும்போது, “நானும் ஒருகாலத்தில் இளம் எழுத்தாளனாகவே இருந்தேன். வாசிப்பு அருகி வரும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஏராளமான கவனச்சிதறல்கள் உருவாகியுள்ளன. இந்த காலகட்டத்திலும் இளம் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் இயங்குவது ஆச்சரியமளிக்கிறது. வாசகர்கள் அதிகமாக புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும். நாவல், சிறுகதை, கவிதைகள் மட்டுமல்ல, பிற துறை நூல்கள், வரலாற்று நூல்களையும் வாசிப்பது அவசியம். வாசிப்பது என்பது தியானம் போன்றது” என்றார்.
கற்றாழைப் பச்சை நூலுக்காக விருதுபெற்ற குணா கந்தசாமியை, இலக்கியக் கூடல் அமைப்பின் தலைவர் டி.பாலசுந்தரம் வாழ்த்திப் பேசினார். “குணா கந்தசாமியின் வாழ்வு அனுபவம் பரந்துபட்டது. உலகின் பல்வேறு நிலப் பரப்புகளில் அவர் வாழ்ந்திருக்கிறார்.
அந்த அனுபவங்கள் அவரது நூலில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
விருது பெற்றவர்களின் நூல்களை வாசகர்கள் பெருமளவில் வாங்கி வாசிக்க வேண்டும். இளம் எழுத்தாளர்கள் மேலும் உற்சாகத்துடன் செயல்பட்டு, பல்வேறு ஆக்கங்களைத் தமிழுக்கு அளிக்க வேண்டும்” என்றார்.
ஞா.குருசாமியை வாழ்த்திப் பேசிய தொழிலதிபர் எஸ்.நடராஜன் “இன்று மொழிசார்ந்த மருத்துவம் என எஞ்சியிருப்பது,
சீன மொழியிலும், தமிழ் மொழியிலும் மட்டும்தான். பிற மொழிகளில் ஒன்று மொழி இருக்காது, அல்லது அந்த பண்பாடு சார்ந்த மருத்துவம் இருக்காது. இத்தகைய சிறப்புவாய்ந்த தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, இளம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது” என்றார்.
`விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி’ கவிதை நூலுக்காக சோலை மாயவனை வாழ்த்திப் பேசிய மரபின் மைந்தன் முத்தையா “ஒரு இலக்கியப் படைப்பின் வெற்றி, சித்தரிப்பின் வல்லமையில் உள்ளது. அந்த வகையில், தான் வாழும் சூழலை, இயற்கை சீரழிப்பை, சொந்த நாட்டுக்குள்ளே இடப்பெயர்ச்சி உருவாக்கும் சிக்கல்களை தனது கவிதைகளில் அழகாக படம் பிடித்துள்ளார் இந்தக் கவிஞர்” என்றார்.
விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் ஏற்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.