திருப்பத்துார்:
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், திருப்பத்துாரில் நேற்று பங்கேற்ற விழாவுக்கு, அதிகாரிகள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதி அளித்தனர், இதில் கட்சி சார்பில் எந்தக் கருத்துகளையும் கூறக்கூடாது, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பேசக்கூடாது என்று அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
வேலுார் மாவட்டம், திருப்பத்துார் காமராஜர் நுாற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், 117வது ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று மாலை நடந்தது. இதில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
திருப்பத்துாருக்கு வந்த கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய பாரதம் மக்கள் கட்சி சார்பில், சிலர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை, போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் விண்ணப்பித்த போது, வேலுாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதன்படி, 'விழாவில் கட்சி சார்பில், எந்த கருத்து களையும் பேசக் கூடாது. மதம் சம்பந்தப்பட்டு, யாரையும் விமர்சித்து பேசக் கூடாது' என்பது உட்பட, பல்வேறு நிபந்தனைகளை,அதிகாரிகள் விதித்தனர்.
விழா ஏற்பாட்டாளர்கள், நிகழ்ச்சியில், அரசியல், மதம் சார்பான கருத்து களை கமல் பேச மாட்டார் என, உறுதி அளித்த பிறகே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது:
காமராஜர் ஆரம்பித்து வைத்த அற்புத கனவை, யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என, அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக் கொள்கிறேன். எழுத்து கூட்டி படிக்கும் ஒவ்வொரு தமிழனும், நினைத்து பார்க்க வேண்டிய பெயர்,காமராஜர்.அனைவருக்கும் கல்வி என்று, காமராஜர் திட்டம் தீட்டினார். அப்படிப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என, ஒதுக்கி விடக்கூடாது.
மாணவர்களை கல்வி சென்றடைய வேண்டும் என, எண்ணிய தலைவர் காமராஜர்.காமராஜர் இந்த அரிய சாதனையை செய்ததற்கு மிக முக்கிய காரணம், மாநில அளவில் கல்விஇருந்ததே ஆகும். இந்திய நாடு பன்முகத் தன்மை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாடு, நாம் அனைவரும் சேர்ந்து கண்ட கனவு” என்று கமல் பேசினார்.