சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீரராகவன் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்ட பொதுமக்கள், நலச் சங்கத்தினர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் குரோம்பேட்டை வீரராகவன் ஏரியை சொந்த செலவில் சீரமைத்த மக்கள்: தொடர்ந்து தூர்வாரவும் திட்டம்

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், குரோம்பேட்டை பகுதி பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் அங்குள்ள வீரராகவன் ஏரியை நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும், நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை, திருநீர்மலை, லட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதனால் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் குரோம்பேட்டை துர்கா நகரில் உள்ள வீரராகவன் ஏரியை சீரமைக்க முடிவு செய்தனர்.

இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. எவ்வாறு ஏரியை சீரமைப்பது, தூர்வார அரசிடம் வலியுறுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் ஒன்று கூடி ஏரியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றினர். இதுபோக தொடர்ந்து தூர்வாரவும் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சந்தானம் கூறியதாவது: வீரராகவன் ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் குட்டையாகவும் புதர் மண்டிப்போய், ஆகாய தாமரைகளால் நிரம்பியும், ஆக்கிரமிப்புகளின் பிடியிலும் உள்ளது. பல்லாவரம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தும் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் ஏரியில் கலக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். நகராட்சி சார்பில் ரூ. 16 கோடியில் ஏரியை சீரமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். விரைவில் அரசு ஏரியை சீரமைத்து தூர்வார அனுமதி வழங்க வேண்டும். நீர்நிலைகளை சீரமைக்க எத்தனை முறை அரசிடம் சொல்லியும் எந்த ஒரு பயனும் இல்லாததால் பொதுமக்கள், இளைஞர்கள், தங்கள் சொந்த செலவிலேயே, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை பராமரிக்கத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT