நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக என்.எல்.சி. தலைமை மண்டல மேலாளர் எம்.மகேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் என்.எல்.சி. தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் என்.எல்.சி. அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கம் போராட்ட அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொழிற்சங்க போராட்டத்துக்கு தடை விதித்து கடந்த 29-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் மேற்கண்ட உத்தரவு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கடந்த 20-ம் தேதி முதல் தொழிற்சங்கங்கள் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு நீதிமன்ற உத்தரவை மீறும்படி செய்கின்றனர். பணிக்கு வர விரும்பும் தொழிலாளர்கள், அதிகாரிகள் போன்றவர்களை பணிக்கு வர விடாமல் தடுக்கிறார்கள். இதனால், சுரங்கப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 22-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தபோது, போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றும் தொழிற்சங்கங்களை கேட்டுக் கொண்டோம். ஆனால், எங்கள் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, அவர்களது போராட்டம் சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா இம்மனுவை விசாரித்து, என்.எல்.சி. தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் எஸ்.ராஜவன்னியன், என்.எல்.சி. அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்க செயலாளர் ஆர்.உதயகுமார் ஆகியோர் மனுதாரர் மனுவுக்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.