ஆம்பூர் கலவரத்தின்போது வெட்டுக் காயங்களுடனும் கண் பார்வை பாதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வந்த போலீஸார் பாதிப் பில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றனர். எங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை என்று கண்ணீர் மல்க அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
குடியாத்தத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் காணாமல் போன வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹ்மது (26) என்பவர் ஜூன் 26-ம் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார். விசா ரணையின்போது அவர் தாக்கப் பட்டதால்தான் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஆம்பூரில் ஜூன் 27-ம் தேதி பெரும் கலவரம் ஏற் பட்டது. இதில் பொதுமக்களுடன் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தாக்கப்பட்டனர். பொதுச் சொத்து கள் சேதப்படுத்தப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதி
கலவரத்தில் படுகாயமடைந்த பொதுமக்களும், போலீஸாரும் மீட்கப்பட்டு ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர். காவலர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் ஜூலை 1-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர்.
ஆயுதப் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் கலவர பீதியில் இருந்து இன்னும் மீள முடியாததால், தொடர் விடுப்பில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விடுப்பில் உள்ள காவலர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:
கலவரத்தில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுதப் படை போலீஸார் அதிக அளவில் காயமடைந்தனர்.
வேலூர் ஆயுதப் படை வீரர் விஜயகுமார் என்பவர் பெண் காவலரை காப்பாற்ற முயன்ற போது, கொடூர தாக்குதலுக்கு ஆளானார். அவரை கால், கை, முதுகு என 6 இடங்களில் வெட்டினர்.
அதேபோல் காஞ்சிபுரம் ஆயுதப் படை பெண் போலீஸ் ராஜ லட்சுமிக்கு இடது கண் பகுதியில் கத்தியால் குத்திய காயம் இன்னும் ஆறாமல் உள்ளது.
அவருக்கும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் ஆயுதப் படை பெண் போலீஸார் சுகன்யா, அருள்செல்வி, தீபா, ரஞ்சனி, தீபா, பத்மாவதி மற்றும் பாக்யா ஆகியோர் கலவர பீதியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றனர்.
வேலூரைச் சேர்ந்த காவலர் கள் சங்கரன், பாலாஜி, ராமராஜன், திவாகர், தசரதன், சிவா, ஜெய குமார், ஏசுபாதம், செல்வம், கருணா கரன், பழனி, ராஜேஷ்குமார் மற்றும் குமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே இப்போது பணியில் உள்ளனர். மற்றவர்கள் தொடர் விடுப்பில் உள்ளதாக ஆயுதப் படைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலரை மட்டுமே கைது செய்து விட்டு, மற்றவர்களை கண்டு கொள்ளாதது, கலவரத்துக்கு தூண்டுகோலாக இருந்த முக்கிய நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை. நாங்கள் மனிதர்கள் இல்லையா?’’ என பாதிக்கப்பட்ட போலீஸார் வேதனை தெரிவித்தனர்.