தமிழகம் முழுதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“தமிழகம் முழுதும் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 9 செ.மீ மழையும், திருவண்ணாமலையில் 8 செ.மீ மழையும், விழுப்புரம் மற்றும் கோவையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 மற்றும் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களைப் பொருத்தவரை லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல், தெற்கு வங்கக்கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்”
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.