மதுரை
நாடாளுமன்றத்தில் இந்தி ஆதிக்கம் அதிகம் உள்ளது என, மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தென்காசி, செங்கல்பட்டு ஆகியவற்றை தமிழக அரசு புதிய மாவட்டங்களாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரிய பரப்பளவிலான மாவட்டங்களை பிரிப்பது, நிர்வாக ரீதியாக வரவேற்கத் தகுந்த ஒன்றாகும்.
துப்புரவு பணியாளர்களுக்கு பிற மாநிலங்களில் புதிய நவீன கருவிகள் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே, தமிழகத்தில் வழங்கப்பட்டாலும், இன்னும் மனிதக் கழைவுகளை மனிதர்களே அள்ளும் அவலம், நகர்ப்புறங்களில், ரயில்வே துறைகளில் இருக்கவே செய்கிறது. இந்த அவலத்தைப் போக்க ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அது தொடர்வது வெட்கக்கேடானதாகும். விரைந்து அந்த அவலத்தைப் போக்கிட வேண்டும்", என தெரிவித்தார்.
இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராகும் சூழல் தமிழகத்தில் இல்லை என, தமிழக பாஜக தலைவர் கூறியது குறித்த கேள்விக்கு, "அது அவருடைய விருப்பம், ஆசை. எத்தனையோ நிராசைகளுள் இதுவும் ஒன்று”, என திருமாவளவன் பதிலளித்தார்.
மேலும், மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடவில்லை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு, "அமைச்சர்கள் தம்ழிநாட்டுக்கு வரும்போது தமிழ் மக்களின் உணர்வுக்கு ஏற்ப இப்படிப்பட்ட கருத்துகளை உதிர்ப்பது உண்டு. ஆனால், பாஜகவின் அடிப்படை நோக்கம், பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை தடுத்து விரைவில் இந்தியா முழுவதும் இந்தி பேசக்கூடிய குடிமக்களாக இந்திய மக்களை ஆக்க வேண்டும் என்பதே. நாடாளுமன்றத்திலும் இந்தி ஆதிக்கம் அதிகம் உள்ளது. அதனை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் நாங்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறோம்", என திருமாவளவன் தெரிவித்தார்.