மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதால் வெறிச்சோடி யிருந்த கச்சேரி சாலை. 
தமிழகம்

தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மயிலாடுதுறையில் கடையடைப்பு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழக்கறிஞர்கள் முடிவு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 3 தாலுகாக்களில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் எனக் கோரி 3 தாலுகாக்களில் 6 ஆயிரம் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் தெருக்கள் வெறிச்சோடின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மயிலாடு துறையில் மட்டும் நாளை (ஜூலை 21) வரை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் இன்று(ஜூலை 20) கடையடைப்பு நடைபெற உள்ளது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய மாவட்டம் கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராம.சேயோன், மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தகர் சங்கத் தலைவர் செந்தில்வேல், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தகர்கள் எம்எல்ஏ, எம்பியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாக கூறிவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து மாயூரம் வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ராம.சேயோன் கூறியதாவது:

அரியலூர் மாவட்டத்தை தனி மாவட்டமாக அறிவித்தபோது அங்கு 5 லட்சத்து 17 ஆயிரம்தான் மக்கள்தொகை இருந்தது. ஆனால், மயிலாடுதுறையில் 9 லட்சம் மக்கள்தொகை உள்ளது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என்றால் மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் வழியாகவோ அல்லது திருவாரூர் மாவட்டம் வழியாகவோதான் செல்ல வேண்டும். இதனால் நாகைக்கு சென்று வர ஒரு நாள் ஆகிவிடும்.

கடந்த 2013-ம் ஆண்டே மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியரால் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அதன்பிறகு எங்கள் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

நாகையில் உள்ள நீதிமன்றத் துக்கு மயிலாடுதுறையிலிருந்து தான் அதிக அளவில் வழக்குகள் செல்கின்றன.

எனவே, பொதுமக்க ளின் சிரமம் கருதி மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வழக்குகள் தனியாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை நீதிமன்றத்திலேயே விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நீதிமன்ற கிளை விரைவில் மயிலாடுதுறையில் வர இருக்கிறது.

எனவே, மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு வடிவங்களில் போராட் டம் நடைபெறும். வரும் 22-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

SCROLL FOR NEXT