காரைக்கால் மக்களின் பிரச்சினை குறித்து ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பதாகையுடன் ஓட்டுநர் பி.ரவீந்திரன். 
தமிழகம்

ஆட்டோவில் ‘மக்கள் பிரச்சினை’ பதாகை 

செய்திப்பிரிவு

வீ.தமிழன்பன்

காரைக்கால் 

காரைக்காலில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சிக்கு தனது ஆட்டோவில் எழுதும் வாசகங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார். இதுகுறித்த தகவல் சமூக ஊடகங்களிலும் பரவியுள்ளது.

காரைக்கால் புதுத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பி.ரவீந்திரன். இவர், காரைக்கால் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம் சில மாதங்களாக செயல்படாதது குறித்து கேள்வி எழுப்பி தனது ஆட்டோவின் பின்பகுதியில் மக்கள் கேள்விகள் என்று குறிப்பிட்டு டிஜிட்டல் பேனர் ஒன்றை ஒட்டியுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து காரைக்கால் பகுதியில் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பது:

காரைக்கால் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்தம் செய்ய ஒரே அரசு வாகனம்தான் உள்ளது. அதுவும் சில மாதங்களாக இயங்கவில்லை. இதனால், தனியார் வாகனம் மூலம் சுத்தம் செய்ய மிக அதிக தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இது இங்குள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தெரியுமா? தெரியாதா? எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.ரவீந்திரன் கூறியது: நான் அவ்வப்போது பொதுப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியும், விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தும் ஆட்டோவின் பின்புறம் டிஜிட்டல் பேனர் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பொதுப் பிரச்சினைகள் குறித்து தனி நபர்கள் பேசத் தயங்குவார்கள் என்பதால், என் காதுகளுக்கு எட்டும் மக்கள் பிரச்சினைகளை இவ்வாறு வெளிப்படுத்துகிறேன். முதலில் என் பெயர் போடாமல் எழுதி வைத்திருப்பேன்.

பயத்தின் காரணமாக பெயர் போடுவதில்லையா என சிலர் கேள்வி எழுப்பியதால் பெயர் போடத் தொடங்கினேன்.

நகராட்சியில் கழிவு நீர் அகற்றும் வாகனம் இல்லாததால் சாதாரண மக்கள் தனியார் வாகனங்களுக்கு அதிக தொகை கொடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். அதனால் எப்படியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த வகையில் மக்களின் கோரிக்கையை வெளிப்படுத்தினேன். கண்டிப்பாக விளம்பரத்துக்காகவோ, பாராட்டுக் காகவோ இதை செய்யவில்லை.

பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த வழியிலாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் கூறியது:

தற்போது உள்ள வாகனம் மிகவும் பழைய வாகனம், அதை இனிமேல் பயன்படுத்த இயலாது என்பதால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் கம்ப்ரஸர்களுடன் கூடிய புதிய வாகனம் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு தலா ஒன்று, காரைக்காலுக்கு 2 வாகனங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான கூண்டு கட்டும் பணி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் காரைக்காலுக்கு வாகனங்கள் வந்துவிடும். அதன்பிறகு இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றார்.

SCROLL FOR NEXT