கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5.43 லட்சம் எக்டேரில், 1.45 லட்சம் எக்டேர் வனப்பகுதி. இதில் யானைகள், சிறுத்தைகள், காட்டு பன்றிகள் மற்றும் மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவை தவிர சிறு சிறு மலை பகுதிகளில் ஏராளமான விலங்குகள் வாழ்கின்றன.
தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், கெலமங்கலம், ராயக்கோட்டை, அஞ் செட்டி, வேப்பனப்பள்ளி, மகாராஜகடை மற்றும் சிங்காரப்பேட்டை போன்றவை அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டவை. இங்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதிளை ஓட்டியும், மலைக்கிராமங்களாகவும் உள்ளது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க உரிமம் துப்பாக்கிகளையே நம்பி உள்ளனர். இதற்காக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து குறைந்து விலைக்கு உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வாங்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க, அதிக சத்தம் கொண்ட வேட்டுகள், நிறைந்த ஒளி வீசும் லைட்கள் போன்ற உபகரணங்களை வனத்துறையினர் வழங்குகின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய கிராமங்களுக்கு மட்டும் இவற்றை வழங்குவதால், மற்ற விவசாயிகள் தற்காப்புக்காக, அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வருவதாக காரணம் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்புக்காக வைத்துள்ள கள்ளத் துப்பாக்கிகளால் பல கொடூர சம்பவங்களும், விபத்துகளும் நடந்துவிடுகிறது. விலங்குகளுக்குப் பதிலாக மனிதர்களை கொல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், எல்லையோர கிராமத்தில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் ஆத்திரமடைந்த அண்ணன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துரத்தும் போது, குறுக்கே வந்தவரை சுட்டுக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தளி அருகே சொத்து தகராறில் விவசாயியை குடும்பத்தினர் சுட்டு காயப்படுத்தினர்.
நேற்று முன்தினம் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், உறவினரையே துப்பாக்கியால் சுட்ட விவகாரம், மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் அதிகரித்துள்ளதற்கு சரியான உதாரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர். பல விவகாரங்கள் ஊர் பஞ்சாயத்து மூலம் தீர்க்கப்படுகிறது. கிராம மக்களை மீறி இத்தகவல் வெளியே தெரியாது.
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் கள்ளத் துப்பாக்கிகளை மக்களிடமிருந்து பறிமுதல் செய்ய மாவட்ட காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் திறந்திருக்கும் ஜன்னல் வழியாக போட்டுவிட்டால், அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என இதமாக தெரிவித்தபோது, பயன்படுத்த இயலாத துப்பாக்கிகளை மட்டுமே வீசிவிட்டுச் செல்கின்றனர்.
துப்பாக்கியால் அதிகரிக்கும் துயரச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
இது குறித்து எஸ்பி கண்ணம்மாள் கூறும்போது,
அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பூட்டிக்கிடக்கும் அரசு அலுவலக ஜன்னலுக்குள் போடுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். விரைவில் மாநில எல்லையோர கிராமங்களில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் கள்ள துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படைக்காமல் இருப்பதை காவல்துறையினரோ, வருவாய் துறையினரோ அல்லது வனதுறையினரோ கண்டுபிடித்தால் அவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தார்.