இரா.கார்த்திகேயன்
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற, கிராமியக் கலைகளில் பிரதான அங்கம் வகிப்பது பெண்கள் கும்மி ஆகும். இதில், பவளக்கொடி கும்மி மற்றும் வள்ளி கும்மி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் குழுவாக ஆடி மகிழ்ந்து, பார்ப்பவர்களை மகிழ்விப்பதே இந்த ஆட்டங்களின் சிறப்பு.
கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக கொங்கு மண்டல கிராமங்களில் தைப்பொங்கல், மாரியம்மன், மாகாளியம்மன் பூச்சாட்டு விழாக்களில் மக்களை மகிழ்வித்த இந்தக் கலை, கிராமங்களில் இருந்து பெருவாரியாக மக்கள் வெளியேறத் தொடங்கிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் கிராமத்தை விட்டு இந்தக் கலையும் வெளியேறியது.
ஜல்லிக்கட்டு போராட்டம் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்த தருணத்தில், இந்த கலை மீண்டும் உயிர்பெற்றது. இதுகுறித்துதிருப்பூர் கும்மி பயிற்சியாளர் விஸ்வநாதன் கூறும்போது, “ஜல்லிக்கட்டுப் போராட்டம், மறைந்துகிடந்த பல தமிழர் வாழ்வியல் கலைகளுக்குமேடை அமைத்து தந்தது. கொங்கு மண்டலத்தில்ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் எல்லாம், பொதுமக்களை உற்சாகப்படுத்துவதற்காக பவளக்கொடி மற்றும் வள்ளி கும்மி ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்கள், குழந்தைகள்என அனைத்துத் தரப்பினரும் இதை வெகுவாக ரசித்தனர்.அதன் பிறகு, வயது வித்தியாசமின்றி பலரும் கும்மி பழகி, கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்கள், பொங்கல் விழாக்களில் அரங்கேற்றம் செய்கிறார்கள். பல்வேறு கிராமங்களிலும் மீண்டும் கும்மி ஆட்டம் உலாவரத் தொடங்கியுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த கும்மி கலைக்கு, ஜல்லிக்கட்டு போராட்டம் மூச்சுக்காற்று தந்து, இந்தக் கலையை உயிர்ப்பித்துள்ளது” என்றார்.
“கும்மி ஆட்டத்தை ஆடிப்பார்த்தால்தான் அதன் இனிமையும், ரம்மியமும் புரியும். இதை பாடிக்கொண்டே ஆடும்போது, நம் முன்னோர்களின் பெருமையை உணரமுடிகிறது. உள்ளங்கைகள் இரண்டையும் கும்மி தட்டும்போது, அத்தனை அக்குபஞ்சர் முனைகளும் தூண்டப்படுகின்றன. கால்கள் மற்றும் கைகளை ஆட்டி ஆடும்போது, உடம்பின் அத்தனை மூலை முடுக்குகளில் பிராணவாயு பாய்கிறது. கை, கால் வலி பறந்து விடுகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம்தொடங்கி, மன அழுத்தம் வரைஅனைத்தும் குறைகிறது. நம்ஆரோக்கியத்துக்காக, குறிப்பாக பெண்களுக்காக நம்முன்னோர்களால் கண்டறியப்பட்ட கலைதான் கும்மி. தற்போது இக்கலை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவி, மக்களால் கொண்டாடப்படுகிறது.
பல்லடம்- உடுமலை சாலையில், குள்ளம் பாளையத்தை சேர்ந்த 80 வயது பாடலாசிரியர் சாமிநாதன் மற்றும் சிவநாதன், விஸ்வநாதன், ராசுக்குட்டி, ராஜமுத்துரத்தினம் ஆகியோர் தங்கள் அற்புதக் குரலால் பாடி, ஆட்டமும் சொல்லிக்கொடுத்து, எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக கலையைக் கற்றுத் தருகின்றனர்” என்கின்றனர் கும்மி ஆடும் பெண்கள்.