தமிழகம்

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: முதல்வர் தனிப்பிரிவில் வழக்கறிஞர்கள் மனு

செய்திப்பிரிவு

கட்டாய ஹெல்மெட் வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரி முதல்வரின் தனிப்பிரிவில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர், குழந்தைகளும்கூட ஹெல்மெட் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை பார் அசோசியேஷன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் நேற்று மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறியதாவது:

ஹெல்மெட் தொடர்பான வழக்கில் மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பான விதிகளை அரசு வழக்கறிஞர்கள் சரியாக எடுத்துக் கூறவில்லை. ஹெல்மெட் அணிவதில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் மெய்வழி மரபினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் நீதிமன்ற உத்தரவில் இந்த விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே. போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாத வர்களின் வாகனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நீதித்துறை வரம்பு மீறி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மருத்துவ ரீதியாக பிரச்சினை உள்ளவர்களுக்கு அவர்கள் சான்றிதழை காட்டினால் ஹெல்மெட் அணிவதில் விலக்களிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதை பொதுமக்கள் விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டும். ஆவணங்கள் பறிமுதல் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என நம்புகிறோம் என்றார்.

SCROLL FOR NEXT