தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாததால் தமிழகத்துக்கான செயலாக்க நிதி கிடைக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 2016-17 -ம் ஆண்டு முதல் செயலாக்க நிதி தமிழகத்துக்கு வரவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தினார் ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் அடிப்படை பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா ஒரு கேள்வியை எழுப்பி, அது சம்பந்தமாக மத்திய பஞ்சாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஒரு பதிலை தந்திருக்கின்றார்.

அதாவது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் 2016-17ஆம் ஆண்டின் நிதியாண்டில் இருந்து செயலாக்க மானியத்தை தமிழகத்திற்கு வழங்கவில்லை என்று தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்.

புதிய உள்ளாட்சி அமைப்புகள் 24-10-2016 அன்று தேர்தல் நடைபெற்று தேர்வு செய்திருக்க வேண்டும். அரசியல் சட்டப்பிரிவு 243-ல் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 5 வருடம் என்றும், அந்த பதவிக்காலம் முடிவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் முடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக அந்த விதியில், சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தினால் உள்ளாட்சிப் பகுதியில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அதனால் தான், 2016-17 ஆம் ஆண்டு முதல் செயலாக்க நிதியும் விடுவிக்கப்படவில்லை என்று மத்தியில் இருக்கக்கூடிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார்.

எனவே இப்பொழுதும் நான் கேட்டுக்கொள்கின்றேன். இனியும் தாமதம் செய்யாமல் இந்த உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு இந்த அரசு முன் வரவேண்டும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT