ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... இப்படி ஆரம்பிக்கும் கதையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துக் கேட்பார்கள். கதை கேட்க விரும்பாத குழந்தைகள் இருக்க முடியாது. குழந்தைகளின் கனவு உலகமே தனிதான்.
ஒரு விஷயத்தை நேரடியாக சொல்வதைக் காட்டிலும், கதைகளின் வழியாகச் சொன்னால், குழந்தைகள் மனதில் அது பசுமரத்தாணிபோல ஆழப் பதிந்துவிடும். ஆனால், இப்போதெல்லாம் கதை சொல்ல பாட்டியும் இல்லை, கேட்க பொறுமையும் இல்லை. இந்த நிலையில், குழந்தைகள் மனதில் நல்லதை விதைக்க, கதை சொல்லும் தொடர் நிகழ்வைத் தொடங்கியுள்ளது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்.
‘கண்மணியே கதை கேளு’ என்ற கதை சொல்லும் நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடைபெற்றது. குழந்தைகளின் பிரியத்துக்குரிய கதை சொல்லி அமுதா கார்த்திக், குழந்தைகளுக்கு பல கதைகளைக் கூறி, தனி கனவுலகம் அழைத்துச் சென்றார்.
பார்வதி பாட்டி கதை, காக்கா காக்கா கோக்கு மாக்கா, காக்கையும் எலியும் என பல கதைகளை, தனக்கே உரிய பாணியில் கூறி, குழந்தைகளை மகிழ்வித்தார். கதைகள் கேட்க மட்டும் கூடாது; கேட்ட கதைகளை பிறருக்கும் கூற வேண்டும் என்று பார்வதி பாட்டி கதையின் வழியாக அறிவுறுத்தினார்.
‘காக்கா காக்கா கோக்கு மாக்க’ கதை தன் உடல் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மை கூடாது. பிறரின் உருவத்தை வைத்து கேலி செய்யக்கூடாது என்பதை காக்கையின் வழியாக, சிரிக்க சிரிக்கச் சொன்னார். நாம் பெரும் துயரில் இருந்தாலும், சக உயிரினம் துன்பத்தில் இருந்தால், கை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்பதை ‘காக்கையும் எலியும்’ கதை மூலம் நகைச்சுவையுடன் கூறினார்.
இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். கதைகள் மட்டும் கூறாமல், கதைகளின் வழியே ஆரோக்கியமான உணவு முறை, பிறருக்கு உதவும் மனப்பான்மையின் அவசியம் உள்ளிட்டவற்றையும் விளக்கினார். குழந்தைகளின் ஆரவாரம், கைதட்டல், சிரிப்பலை என குதூகலத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கதை சொல்லி அமுதா கார்த்திக்குடன் உரையாடியும் குழந்தைகள் மகிழ்ந்தனர். குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தினர்.
வரும் ஆகஸ்ட் மாதம் முதல், மாதந் தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அனுமதி இலவசம் என்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்நிறுவன நிர்வாக இயக்குநர்
எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.