சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து, செல்கின்றனர். ஏழைகளின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் உதகைக்கு சுற்றுலா வரும் ஏழை, நடுத்தர மக்களுக்கான ஒரே போக்குவரத்து, அரசுப் பேருந்துகள்தான்.
உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் (பகுதி 1) ஆகிய போக்குவரத்துக் கிளைகளை உள்ளடக்கி, உதகையில் அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகம் செயல்படுகிறது.
உதகை கிளையிலிருந்து 250 பேருந்துகள் உள்ளூர், கிராமப்புறங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல இடங்களுக்கும் இயக்கப் படுகின்றன. இதுதவிர, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள், உதகைக்கு வந்து, செல்கின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உதகை பேருந்து நிலையத்துக்கு வந்து, பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்குப் பயணிக்கின்றனர்.
குண்டும் குழியுமாக...
சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகையின் பேருந்து நிலையம், சர்வதேச தரத்தில் இல்லாதது கவலைக்குரியது. பேருந்து நிலையத்தின் பல பகுதிகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. மழைக்காலங்களில் பெரிய குழிகளில் பேருந்துகள் இறங்கி, ஏறும்போது மழை நீர் மற்றும் சகதி பயணிகள் மீது தெறிக்கிறது.
மாறிவிடும். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்தக் குழிகளில் கால் இடறி கீழே விழுந்து, பேருந்து சக்கரங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தின் உள்ள பணிமனை தளம்கூட சேறும், சகதியும் நிறைந்து காணப்படும். அதில் நின்றபடிதான் மெக்கானிக்குகள் பணியாற்ற வேண்டும்.
ரூ.2 கோடியில் தொடங்கிய பணி...
இந்த நிலையில், உதகை பேருந்து நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணி தொடங்கும் என்று கடந்த 2017-ம் ஆண்டு மலர்க் கண்காட்சியின்போது முதல்வர் அறிவித்தார். சீரமைப்புப் பணிக்கு ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கூடுதல் நிதி கோரி, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு திட்ட மதிப்பீடு சமர்ப்பித்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உதகை மத்தியப் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் தொடங்கின.
“உதகை பேருந்து நிலையத்தை மேம்படுத்த அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க சிமெண்ட் கற்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், பயணிகளைக் கவரும் வகையில் நவீன கூரை அமைக்கப்பட்டு, பேருந்து தளத்திலிருந்து மக்கள் நடமாடும் மேடை பகுதி உயர்த்தப்படும்.
உதகையின் காலநிலை மோசமானது என்பதால், காத்திருப்பு அறை முழுவதும் கண்ணாடிகளால் அமைக்கப்படும். பேருந்து நிலையத்தில் இரு கடைகள், ஒரு ஏடிஎம் மையம், ஒரு ஹோட்டல், தகவல் மையம், புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.
மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம் நவீனப்படுத்தப்படும். இப்பணிகள் நான்கு மாதங்களில் நிறைவடையும்” என்று அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.
இந்தப் பணிகள் நான்கு மாதங்களில் நிறைவடையும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், கெடு முடிந்து கூடுதலாக நான்கு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், இதுவரை பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் நிறைவடையவில்லை.
தற்போது மழை பெய்து வருவதால், வெளியில் உள்ள சகதி பேருந்து நிலையத்தில் நிறைந்து விடுகிறது. பேருந்து நிலையம் உள்ளே வரும் பயணிகள், இருக்கைகள் இல்லாமல், குளிரிலேயே நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
தரமில்லாமல் நடைபெறுகிறதா?
மேலும், புனரமைப்புப் பணிகள் தரமில்லாமல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜெ.ஜனார்த்தனன் கூறும்போது, “உதகை மத்தியப் பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் நீண்டகாலமாக நடந்து வருகின்றன. இதன் காரணமாக, பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரக்கூட போதிய வசதிகள் இல்லை.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல், பேருந்து நிலையம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. உதகையின் குளிர், சூறாவளிக் காற்று, மழை அதிகமான காலநிலையைக் கருத்தில்கொண்டு, முன்பு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனால் அப்போது கூரை சாய்வாக அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு, கூரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூரை பருவமழைக் காலங்களில் வீசும் காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறியே.
விசாலமாக இருந்த பேருந்து நிலையத்தின் கூரையை தாழ்வாக அமைத்து, உயரத்தைக் குறைத்து விட்டனர். மேலும், போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வறைகள் உள்ள கட்டிடத்தின் வெளிப்புறம் மட்டும் புதிதாக ஷீட்களை அமைத்து, வெளிப்புறத்தை மூடி விட்டனர். பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பணி தரமில்லாமல் உள்ளது. இதனால், மக்களின் வரிப் பணம் விரயமாகிறது” என்றார்.
ஜெ.ஜனார்த்தனன்
ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்!
இந்நிலையில், புனரமைப்புப் பணி உரிய நேரத்தில் முடிவடையாததால், ஒப்பந்ததாரருக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து கழக நீலகிரி மாவட்ட பொது மேலாளர் மோகன் கூறும்போது, “உதகை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் 4 மாதங்களில் நிறைவடைந்திருக்க வேண்டும். தேர்தல் நன்னடத்தை
விதிகளால் ஒப்பந்ததாரருக்கு பணியாணைகள் வழங்க முடியவில்லை.
எனினும், பணிகள் அதிக காலதாமதமாகியுள்ளது. புனரமைப்புப் பணிகள் நிறைவடையாததால், ஒப்பந்ததாருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் பணிகளை முடித்துத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார். பணிகள் தரம் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய, பின்னரே பில் தொகை முழுவதும் வழங்கப்படும்” என்றார்.