மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தின் நிலை என்னவென்று மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 1924-ம் ஆண்டு மதுரையில் இருந்து போடி வரை 90.48 கி.மீ. தொலைவு மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்த போடி-மதுரை மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப் போவதாக அரசு அறிவித்தது.
அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 2010, டிசம்பர் 31-ம் தேதி ரயில் போக்குவரத்தை நிறுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடந்த 2015-ம் ஆண்டு வரை போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகள் நடைபெறவில்லை.
இதற்கிடையில், போடி-மதுரை அகல ரயில் பாதை போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், மக்களவையில் இன்று (புதன்கிழமை) பேசிய தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார், மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான ரயில் பாதை பணி எப்போது நிறைவுபெறும் என கேள்வி எழுப்பினார். ரூ.304 கோடி செலவில் திட்டமிடப்பட்ட பணி பல ஆண்டுகளாகத் தேங்கி நிற்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் பேசும்போது, "கடந்த 1924-ம் ஆண்டு மதுரையில் இருந்து போடி வரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன.
தேனி - மதுரை - ராமேஸ்வரம் வரையிலான இந்த ரயில் தடம், மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திர போராட்டத் தலைவர்கள் மற்றும் வீரர்கள் பயணித்த வரலாற்று சிறப்புமிக்க ரயில்தடம். இதனை இந்த அவையில் எடுத்துரைப்பதில் பெருமை கொள்கிறேன்.
மீட்டர் கேஜ்-ஆக இருந்த வழித்தடத்தை ரூ.304 கோடி செலவில் அகல ரயில் பாதையில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட பணி என்ன ஆனது? இந்த தருணத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இக்கேள்வியை நான் முன்வைக்கிறேன். தேனி - போடி இடையே எப்போது ரயில்வரும்? இந்த ரயில் பாதை திட்டத்தை வேகப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
என்ன சொல்கிறது மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம்?
இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, "முதல்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி இடையே ரயில் இயக்குவது தொடர்பான பணிகள் 80% நிறைவடைந்துவிட்டன. 2019 மார்ச்சில் இயக்க திட்டமிட்டிருந்த நிலையில், நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை பணி முடிவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து தொய்வு நிலை உள்ளதால் திட்டமிட்டபடி அந்த தடத்தில் ரயிலை இயக்க இயலவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்தப் பணி முடிந்து முதற்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி இடையே அகல ரயில் பாதையில் ரயிலை இயக்க முயற்சிக்கிறோம்"