சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் மது குடித்தாலோ, வரதட்சிணை வாங்கினாலோ தண்டனை கொடுப்பதோடு குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.
சிவகங்கை அருகே ஆலவிளாம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வேடுவர் இனத்தைச் சேர்ந்த 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களது முன்னோர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருச்சி கொள்ளிடம் பகுதியில் இருந்து இப்பகுதிக்கு இடம் பெயர்ந் துள்ளனர். அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் மது அருந்த மாட்டோம் என வாக்குறுதி அளித் துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றுகின்றனர்.
இக்கிராம ஆண்கள் வரதட்சிணை வாங்குவதில்லை. அதேபோல் பெண்களுக்கும் வரதட்சிணை கொடுப்பதில்லை. இதை கல்வெட்டில் எழுதி ஊர் நுழைவாயிலில் வைத்துள்ளனர். மேலும் மது குடித்தாலோ, வரதட்சிணை வாங்கினோ தண் டனை வழங்கப்படும் என எச்சரித் துள்ளனர். குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கேமராக்களை இளைஞர்கள் சொந்த செலவில் பொருத்தியுள்ளனர். எனவே இந்த ஊர் மக்கள் காவல் நிலையம் சென்றதில்லை. இது குறித்து ஆலவிளாம் பட்டியைச் சேர்ந்த ஆர்.தங்கராஜ் கூறியதாவது:
மது குடிப்பது, வரதட்சிணை கட்டுப்பாட்டால் எங்கள் கிராம இளைஞர்களுக்கு வெளியூரைச் சேர்ந்த பலரும் பெண் கொடுக்க ஆர்வமாக உள்ளனர். கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் உள்ளது. கேமராக்கள் மூலம் சமீபத்தில் பெண் கடத்தலை தடுத்தோம். மதகுபட்டி-கல்லல் சாலையில் விபத்து ஏற்படுத்திய வாகனங்கள் மற்றும் குற்றங்களைக் கண்டுபிடிக்க இந்த கேமராக்கள் போலீஸாருக்கு உதவியாக உள்ளன என்றார்.